நான் ஆண் என்பதால்,,,,(தாரகை)

*** நான் ஆண் என்பதால்...***
அவள் என்னை முதலில் காதலித்தாலும்
நான் தான் முதலில் காதலை சொல்ல வேண்டுமாம்.
அவளின் வீணான செலவிற்கும்
நான் வியர்வை சிந்தி உழைக்க வேண்டுமாம்.
அழகுண்டா சொத்துண்டா பார்க்கவில்லை.
அன்புண்டா அதுபோதும் என திருப்திகொண்டேன்.
காதல் திருமணமென்பதால்
கட்டிய துணியோடு அழைத்துவந்தேன்.
பட்டணத்துப் பெண்ணென்பதால்
பட்டிக்காட்டு மக்களோடு
பழக பிடிக்கவில்லையென்றாள்,,,
படிக்காத என் பெற்றோரை
பாரமாக நினைத்து தனிக்குடித்தனம் அமர்த்த தூரமாக அழைத்துவந்தாள்,,,
என் வாரிசை சுமப்பதால்
வீட்டு வேலைக்கு நிரந்தர ஓய்வெடுத்தாள்,,,
அன்பினால் சில சலுகைகள் தந்தேன்
ஆசையால் சில சேவைகள் செய்தேன்
இன்று அவை கடமையாய்
என்றுமே நிரந்தரமாய் என்பணியாய் ஆனதிங்கே,
பிரசவத்திற்கு தாய்வீடு சென்றவள்
பிள்ளைகள் வளர்ந்தும் வீடுதிரும்பவில்லை.
அவளுக்கு அருகினிலே உறவுகள் பலவுண்டு.
அதனாலோ என்னவோ என் தனிமை உணர மறுக்கிறாள்.
இன்று என்னோடு இருப்பதெல்லாம்
அன்று அவளுக்காய் நான் வந்த ''தனிக்குடித்தனம்" மட்டுமே
உண்ண உணவின்றி
உருட்டுகின்றேன் அடுப்படியில்,,,
இணைவதற்கு உறவின்றி
உலவுகின்றேன் இணையத்தில்
இனிமையான தூக்கமின்றி
உருளுகின்றேன் தனிமையில்,,,
அரவணைக்க அன்பின்றி
அலைகின்றேன் வேதனையில்,,,
அன்றிருந்த அக்காதல் இன்று எங்கே போனதென்று
தேடுகின்றேன் குழப்பத்தில்,,,
அழுகின்றேன் சப்தமின்றி
இருள்சூழ்ந்த இரவுகளில்,,,
நான் ஆண் என்பதால்,,,,,