ரமலான் நோன்பு
வயிறுடன் இதயமும்
சுத்தமாகின்றது
ரமலான் நோன்பு
...................................................
ஆழ்மன நிசப்தங்களை
கிழித்துச் செல்கின்றன
வைகறையின்
பக்கிர் பாடல்கள் .....
.................................................
பசித்திரு
விழித்திரு
துதித்திரு ...
நோன்பு தத்துவங்கள் ....
...........................................
வைகறைக்குமுன்
ஈரமான நெஞ்சுக்குழிகள்
அஸ்தமம் வரை
ஈகைகளால் மட்டுமே
தன்னை
ஈரமாக்கி கொள்கின்றன .....
............................................................................
அந்தி பொழுதுகளில்
வறண்ட நாவிற்கருகில்
மிளிரும் உணவு கடந்து
பாவ மீட்சிக்காய்
துடிக்கும் உதடுகள்
கண்ணீரில் குளிக்கும்
விழிகள் .....
...........................................................................
திருமறை வரிகளையே
சுவைக்கும் விழிகள் ...
விருந்துகளாய் தான்
விழிகளின் நோன்புகள்
.............................................................
மசூதி புறாக்கள்
கணக்கிட்டு கொண்டிருக்குமோ
பள்ளியை நிறைக்கும்
மானுட கூட்டத்தை ....?
......................................................................
ஏழைகளை தேடியபடியே ....
இரண்டரை விழுக்காடு
செல்வம்
கட்டளையாகிய
கட்டாய ஈகை
...............................................................
தலைவாசல் மாடத்தில்
நிறைந்த சில்லறைகள்
காத்துக் கொண்டிருக்கின்றன
யாசிப்பு கரங்களுக்காய் ....
..................................................................
ஈகை தொழுகையின்
இறுதிநாட்களில்
கையேந்தும் கரங்களில்
வழங்கிவிட்டு வந்த
ஈகை அரிசியால் ...
வேண்டுதல்கள் ...
....................................................................
இப்படியே நகராதா ...
ஏனைய நாட்களும்
என்றே ...
கதறுகின்றன...
ஆயுள்கள் ...
ரமலானின் பிரிவுகளில் .......