காக்கை நேயம்!
மின்மாற்றி ஒன்றின்
மிக அருகில் சென்ற காக்கை,
காலை வைத்ததோ?
தலையை வைத்ததோ?
கரண்ட்டடிபட்டுக்
கருகி வீழ்ந்தது!
அருகினில் இருந்த
மற்றொரு காக்கை,
அலறியது,துடித்தது,
அருகினில் வந்தது!
சுற்றிச் சுற்றித்
தொட்டுப் பார்த்தே
உயிரில்லாத
உண்மை உணர்ந்தது!
கா..! கா..வெனவே
கத்தியது,கதறியது,
உறவுகளையெல்லாம்
உடனே அழைத்தது!
ஒரு சில நிமிடங்களில்
ஓராயிரம் காக்கைகள்
ஓரணியில் திரண்டன!
தூக்கிப் புதைக்க
முடியாதெனினும்
கத்திக் கதறித் தம்
துக்கம் பகிர்ந்தன!
தன நிறத்தையே
கறுப்புக் கொடியெனக் காட்டி!
ஆளில்லா நெடுஞ்சாலை ஒன்றின்
அரக்கப் பறக்கும் வாகனங்களுடன்,
வெளியூர் வேலை ஒன்றை முடிக்க,
நானும் சென்றேன் என் வாகனத்தில்!
என்னைப் பின்னுக்குத்
தள்ளிய வேகத்தில்
துள்ளுந்தில் சென்ற
துடிப்பான வாலிபன்,
வளைவு ஒன்றில் திரும்பும்போது
வழுக்கி விழுந்து துடி துடித்தான்!
பதறிய நானோ உடன் நின்று
உதவி செய்ய முற்பட்டேன்!
உயிருக்குப் போராடும்
இளைஞனைக் காக்க,
ஒவ்வொரு வண்டியாய்
நிறுத்த வேண்டினேன்!
அவர்களுக்கென்ன அவசரமோ?
வேகம் குறைக்காமல்
விலகிச் சென்றனர்!
ஆளில்லாத சாலையிலே
ஆம்புலன்ஸ் வரவே
அரை மணியாயிற்று!
அரைகுறை உயிருடன்
அவனை ஏற்றி
அனுப்பி விட்டுச்
செல்லுகையில்
மனிதரின் நேயம்
புரிந்ததினால் ,எனக்குக்
காக்கைகளின் நேயம்
பெரிதெனப் பட்டது!