கரிநாள் -கே.எஸ்.கலை
எழுதுகோல்
எடுத்தவனெல்லாம்
பெருங் கவிஞன் என்று சொல்லி
வெற்றெழுத்துக் கிறுக்கி
வீராப்புச் செய்யும் கால்...
எதுகை மோனை வைத்து
எள்ளி நகையாடி – நெஞ்சங்களைக்
கிள்ளி விளையாடி,
நரகத்தில் எழுதியது போதுமென்று
சொர்கத்தில் கவியெழுதப் போனாயோ ?
வெற்றிலைப் பாக்குடன்
வெண்தாடி நீ -
அழையாமல் ஓடிவரும்
மோனையோடு எதுகை -
இனி அதையிங்கு
அழைத்துவர ஏது கை?
தமிழுக்குத்
தவப் புதல்வனாய்
வந்தவன் போகிறான் - இன்று
தமிழர் மனம் உடைத்துச்
சவப் புதல்வனாய் !
வீரமோ விரகமோ
குமுகாயமோ சமுதாயமோ,
எண்ணமெல்லாம் வண்ணமய
கவிதைகளைத் தூவி
பாடிவிட்டு போகிறாயே பாவி - உன்
கூடு விட்டு ஓடியதே ஆவி !
தமிழோடு உறவாடி
தமிழர்மனம் களவாடி
ஆடவைக்கப் பாட்டெழுதி
ஆட்டுவித்தத் தமிழா – நீ
ஆடியிலே போவதற்கு ஆசைப்பட்டு
எம்மை ஆட்டுவித்துப் போகிறாயே சரியா?
துட்டுக்கு எழுதினாலும்
தமிழ்
மெட்டுக்கு எழுதினாலும்
கேட்டுத் துள்ளா மனசில்லை
இந்த கெட்டச் செய்தி
கேட்டு விட்டு – மனசு
கெட்டுப் போகா
மனுஷனுமில்லை !
சித்தமெல்லாம் பித்தாக்கிய
ஸ்ரீரங்கப் கவிப்புலியே
எமைச் சிதைத்துவிட்டுக் -
கூற்றனுக்குப் பாட்டெழுத
கூடுவிட்டுப் போனாயோ !
நீ பாடையேறும் வேளை
சினிமாவும் இனி கொஞ்சம்
ஆகிப் போகும் ஏழை !
தமிழனுக்கு
எப்போதும்
ஜூலை கறுப்பு !
இந்த ஜூலை - உனக்கு
ஊற்ற வைத்தாய் பாலை - தமிழன்
மனசிங்கே ஆகியதே பாலை !
தாடித் தமிழனுன்னை
சளிப்பிடித்துக் கூட்டிப் போக
வாடித் தமிழன்னை
சனிப்பிடித்துக் கிடக்கிறாளே !
கருப்பு நாள்
இந்த வெறுப்பு நாள்
நெருப்புக் கவிஞா - உன்
சிதை எரிநாள்
தமிழனுக்கு
மற்றுமொரு கரிநாள் !
------------------------------வலியோடு வாலிக்கு !

