கண்தானம்
அதிகாலைகள் அழகானவை
இலைநுனி நழுவி
பூவில் விழும் பனி!
வர்ணஜால வானம்
அதில் குளிக்கும் சூரியன்!
மேகம் கடக்கும் பறவைகள்
பார்க்க பார்க்க
அத்தனை அழகு.
ஆனால் பார்வையற்றவர்க்கு?
பற்பல வாகனங்கள்
பரபரக்கும் சாலைகள்.
வெயிலென்றால் புழுதி பறக்கும்
மழையென்றால் சகதி தெறிக்கும்.
திறந்து கிடக்கும் சாக்கடை
மூடப்படாத பள்ளங்கள்.
கால்களிலும் கண்வைத்து
கவனமாய் கடக்க வேண்டும்
இன்றைய சாலைகளை!
பார்வையற்றவர்
என்ன செய்வார்?
இரவென்றால் கருப்பு
நிலவென்றால் வெள்ளை
மரமென்றால் பச்சை
கடலென்றால் நீலம்
வர்ணங்களால் நிறைந்தது உலகம்.
கருப்பு நிறமன்றி
வேறொன்றும் அறியாத
கண்பார்வை அற்றவர்
என்ன செய்வார்?
உருவ வழிபாடில்லை
நிலவும் பிறையும் மட்டும்தான்
இஸ்லாம் மதத்தில்.
சிலுவையில் அறையப்பட்டும்
எல்லோரையும் ரட்சித்தபடி
இயேசு கிறிஸ்து
கருப்பசாமி தொடங்கி
நம்பிக்கைகளே வடிவங்களாய்
அத்தனை தெய்வங்கள்
இந்துக்களிடம்.
எது கடவுளென
எப்படி கும்பிடுவார்
பார்வையற்றவர்?
அழகிய சாலைகள்
அழகழகாய் வர்ணங்கள்
எண்ணிக்கையில் அடங்காத
இயற்கையின் அழகுகள்.
அவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
நிலத்தில் புதைத்தோ
நெருப்பில் எரித்தோ
அழிக்காதீர்கள் கண்களை.
இறந்தபின்பும்
இவ்வுலகை நீங்கள் காண
இருக்கும்போது
இவ்வுலகை அவர்கள் காண
கண்தானம் செய்யுங்கள்.
முடித்து வைத்த சிற்பம்
கண் திறக்கப்படும் கடைசியாய்.
அதுபோல்
அழகு பெறட்டும்
அவர்கள் வாழ்வு.
பார்வையை பரிமாறுங்கள்
படைத்தவனாய் இடம் மாறுங்கள்.