உலர்ந்த நீர்த்துளிகள்
நீர்த்துளிகள்
நதிகளை தொலைத்திருந்தன
மழை ஜென்மம் தேடி
ஆவியாகவே
அலைந்து கொண்டிருந்தன
நீர்த்துளிகள் ...
வான வெளிகளில்
..........................................................................
புவியெனும்
மோட்சம் இல்லாமலேயே
மேகத்தின் சிறைக்கூடங்களில்
நீர்த்துளிகளின்
விம்மல் சத்தங்கள்
.........................................................................
காற்று கூந்தலுக்குள்
ஈரமாய் தவழ
முடியாமல்
தடுமாறும் நீர்த்துளிகள்
சலனமில்லா
தவத்திலேயே
விருட்சங்கள்
.....................................................................................
தண்மை தேடியே
உலர்ந்து மடியும்
நீர்த்துளிகள்
ஈரமின்றி மரங்களின்
இரத்தம் சுவைக்கும்
கோடரி முனைகள்
...........................................................................
வறண்டு போயிருந்த
பூமியின் மூலையில்
ஈரம் காய்ந்த
இதயங்களால்
ச் ..ச் சீ .... என்றே
ஒதுக்க பட்டன
பட்டினிச் சாவின்
கடைசி விழிநீரும்
..........................................................................
மழைக்கான ...
பூசைகளிலும்
தொழுகைகளிலும் ....
மனிதம் தொலைத்த
இதயங்களால்
முகம் சுளிக்கும் கடவுள் ....
.....................................................................................
ஆம்
நீர்த்துளிகள்
தொலைத்தது
நதிகளை மட்டுமல்ல
மானுட வெள்ளத்தையும் தான் ...

