"எங்கே தேடுவேன்..!"
பறக்கும் பறவைகளிடத்தில்
ஒற்றுமை கண்டேன்,
இதனிடத்தில் ஒற்றுமை என்பது
துளியும் ஒன்றாமை கண்டேன்..!
நற்குணம் ஏதும்
இதன் நாடியில் படர்ந்ததில்லை,
நற்குணங்கள் இதனை நாடியும்
இது அதனை ஏற்பதாயில்லை..!
தனக்கு மேல் இருப்பவர் மேல்
இது பாய்ந்ததில்லை,
தனக்கு கீழுள்ளவன் கிழவனானாலும்
இது விடுவதாயில்லை..!
வீட்டில் மட்டும் இதற்கு
ஆத்திரம் கிட்டும்,
இவைகளை அடக்கி வைப்பது
கடவுள் என்ற பாத்திரம் மட்டும்..!
உதாசினம் என்பது இதன் உயிர் மூச்சு,
உடன்பிறப்பு, இதன் வெட்டி பேச்சு,
அன்னையின் உயிரிழப்புக் கூட
வெறும் கானலாச்சு - இதுவே
இதன் வாடிக்கையாச்சு..!
சாதி,மதம்,இனம்,
மொழி,குலம்,கோத்திரம்,
இது சிரம் தாழ்த்தி மதிப்பது
இவைகளுக்கு மாத்திரம்..!
சூது தான் இதன் இரு காது,
நியாயம் என்பது இதனிடம் இருக்காது..!
கருணை இல்லாமல் மனம் சிறக்காது,
அக்கருணைக்காக இதன் மனம்
என்றுமே திறக்காது..!
எப்படியும் இதுவும் ஒருநாள் பிணமாகும்,
தன் கண் முன்னே கற்பழிப்பு நடந்தாலும்
கருவறுத்து கிடந்தாலும் - வேடிக்கை
பார்பதே இதன் வாடிக்கை குணமாகும்..!
விந்தை மிகு உலகிது என
தன் சிந்தையில் தெளியாமல்
ஆட்டு மந்தைப் போல்,
மூழ்கி கிடக்கிறது பங்கு சந்தையில்..!
தன் காலடியில் உள்ள பூமியை
கேவலம் காசுக்காகவும்,
கா சுகத்துக்காகவும் சுற்றி அலைகிறது,
வெளி நாட்டவன் போடும் கரிதுண்டுக்கு
தன் மானத்தை இழந்து வளைகிறது..!
இவ்வுலகையே ஆட்டிப்படைத்து
பின் நமக்குள்ளும் பாசம் எனும்
நற்பண்பை விதைத்த அன்பெனும் சாரம்...
இது செல்லும் வழியெல்லாம் வழியுது
அதை பகிர்ந்தளிக்க இதற்கு ஏது நேரம்..!
இது தோன்றி பல நாளாச்சு
இதனால் இதன் முன்னோர்கள்
புகழெல்லாம் பாழாச்சு..!
தன் உயரம் தெரியாமல்
மேலும் வளர துடிக்கும்
தன்னையறியா தென்னை போல்
தன் புனிதம் அறியா
'மனிதன்' இத(வ)ன் பெயர்..!