காத்திருக்கிறேன் கண்ணீருடன்...

அவசரக்காலை அல்லல் பயணம் – ஒருதிருப்பம்
எதிரெதிரே நீயும்நானும் மோதிக்கொண்டோம்
நானும்விழுந்து நீயும்விழுந்து
அழுதுத்துடித்தேன் – வலியில்நானும்
பக்குவமாய் நடந்துகொண்டாய்
பலமுறை மன்னிப்புகேட்டாய்
வலியையும் மறந்து வந்த வாகனமும் துறந்து
வீடுசென்றேன் நானும் உன்மீது நம்பிக்கையோடு
அழகாக சரிசெய்து கொண்டுவந்தாய் அடுத்தநாளே!
நன்றியெனும் ஒரு வார்த்தையில் - முடிந்துபோனது
நமக்குள் அன்றைய உரையாடல்!
மீண்டும் சந்திப்போமெனும் நம்ஆவல்
ஓர்நாள் நிறைவேறிவிட்டது!
அழகிய தருணங்கள் வாய்த்தும்விட்டது!
தோழர்களோடு நீயும் தோழியரோடு நானும்
அந்த வணிகவளாகத்தில் அந்திமாலையில் சிறுகையசைப்பு அடுத்தசந்திப்பும்
அத்தோடு முடிந்தது!
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்தோம் இன்ப நாட்களை...
நம்காதலை நீயே முதலில்சொன்னாய் அகமகிழ்ந்தேன் மனம் குளிர்ந்தேன்!...

சொத்து சொந்தம் எதுவும் வேண்டாம்
அப்பா அம்மா எவரும் வேண்டாம்
நம்காதலை எதிர்ப்பவை அத்தனையும்
நமக்கு வேண்டவே வேண்டாம்!
நான்மட்டுமே போதுமென நீயும்
நீமட்டுமே போதுமென நானும்
ஒருவருக்கொருவர் ஒன்றானோம்
இனிதேசென்றன இரண்டு வருடங்கள்
அற்புதமாய்... ஆனந்தமாய்... அமிர்தமாய்!...
அழகியநிகழ்வுகள் எந்நெஞ்சோடு இனிக்கிறதே!...

எங்கிருந்தோ வந்தான் எமனாக ஒருவன்
இன்னும் குழந்தையில்லையாவென குதர்க்கமாய்
விசாரித்து சென்றான் ..
எளிதாக எடுத்துக்கொண்டாய்
எனக்குநீயும் உனக்குநானும் குழந்தையென்றாய்
என்மனது நிம்மதியானது மீண்டும்
அழகாகவே தொடந்தது நம் காதல்வாழ்க்கை!
சிறுசிறுஊடல் சிறுசிறுசாடல் அன்றியும்
நன்றெனவே சென்றென மாதங்கள்
மற்றொருநாள் யாரோஒருவர் உசுப்பிவிட உனக்குள் புகுந்துகொண்டது குழந்தை ஏக்கம் ..
ஏதேதோ சொல்லியும் எப்படிமாற்றியும்
நம்முள் ஒட்டிக்கொண்ட
புதுவரவின் ஏக்கங்கள் தீரவேயில்லை!
எப்படியோ சேர்ந்துகொண்டது
உங்குடும்பம் - உன்னோடுமட்டும்
ஒருகல் பலகற்கலாக உந்நிதயம் தாக்க
நம்காதல் கண்ணாடிமாளிகை உடைந்தேபோனது!
குழந்தையின்மையே பொரும் காயமாகிப்போய்
நம்பிரிவிற்கும் அதுவே காரணமாகிப்போனது..
இன்றும் என்றும் உன்னோடுதானடா – என்
உயிரும் உள்ளமும் அன்பும் ஆசையும்!
உயிரெனும் காதல் எனைவிட்டுப் பிரிந்ததால்
சடலமாகவே வாழ்கிறேன் நான் – இறந்தபின்னும்
எங்காதல் சாம்பலாகி மிச்சமிருக்கும் உனக்காக..

ஓருண்மை தெரியாதடா உனக்கு எனதன்பே!
அன்று மோதலில் விழுந்து
என்வாகனத்தை மட்டுமல்ல
என்னையும்தான் உடைத்துக் கொண்டேன்
வாகனம் சரியானதுபோல் உங்கைபட்டதும்
நானும் சரியாகிவிடுவேனென்ற நம்பிக்கையோடு ஓடினவருடங்கள்!..
எத்தனையோ மாத்திரைகள்
எத்தனையோ மருந்துகள்
உனக்குத் தெரியாமலே இப்பொழுதும்
தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறேன் சரியாகிவிடுமென!
தப்புதான் தவறுதான்
அந்த உண்மையை மறைத்தது!
துடிதுடிக்கின்றேன் இந்த தண்டனையால்..
நீதான் காரணமென அறிந்தால்
உடைந்தேபோய்விடுவாயடா!
அதைவிடவும் இந்த தண்டனையே மேலெனக்கு!
என்றேனும் அறிவாய் எனதன்பை!
அதுவரை கண்ணீரோடும் காதலோடும் காத்திருப்பேன் உன்னவளாக...

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (30-Jul-13, 10:30 pm)
பார்வை : 1063

மேலே