இந்த நாள் பற்றி நினையுங்கள்

துயர இருள் பெய்த பகலில்
தலைகள் கொய்யப்பட்ட முண்டங்களுடனும்
இறந்து போனவர்களின் முகங்களுடனும்
கடற்கரையொன்றின் மணல்வெளியில்
நவீன அடிமைகளாய் ஆக்கப்பட்டோம்

நடுங்கிடும் சூரியனின் பயத்தை
வெடித்து போன நிலாவை
ஒளிந்து கொள்ளும் நட்சத்திரங்களை
உற்று நோக்கிய படி
நிர்வாண சோதனைக்கு ஆட்பட்டிருந்தோம்

அவர்களுடைய வெறித்த கண்கள்
இனவாதச் சகதியில் புதைந்திருந்ததை
ஊசலாடிய உயிர்களோடும்
பாரிய போர்க் காயங்களுடனும்
நின்றபடிக்கே நிச்சயிக்கமுடிந்தது

கண்ணீர் இல்லாததால் நாம் அழவில்லை
அல்லது அழுவதால் ஏதும் ஆவதில்லை
என்றபடிக்கே மண்ணை முத்தமிட்டவர்களின் முகங்கள்
நான் அணிந்திருந்த தேசப்பற்றாளன்
முகமூடியின் மேல் காறி உமிழ்ந்தது

மனித மூளைகளை உண்ணும் இனந்தின்னிகளிடம்
பவுத்தத்தின் காருண்யம் பிறந்திடலாம்
என்கிற கடைசி நம்பிக்கையும்
புத்தனைப் போலவே அமைதியாக இறந்திருந்தது .

வளரும் கோடையில் விரியும் பாலையாக
அந்த மண் மரணங்களோடு படர
மூலவேர் பிரண்ட மரங்களாய்
குருதியின்றி நம்மால் ரத்தம் சிந்த முடியாதென
பல லட்ச அடிமைகளின் நிர்வாண அணிவகுப்பு .

கோபமூட்டும் அல்லது வருத்தப்படுமளவுக்கு
குளறுபடிகளோடு சலிப்பூட்டியது மனிதம் .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (1-Aug-13, 11:00 pm)
பார்வை : 317

மேலே