பாவம் மழலைகள் !

பாவம் இந்த மழலைகள்!
சாபம் அந்த சூழல்கள!
அனுதினம் அவசரங்கள்!
அல்லலோ குழந்தைகள்!
தொட்டிலாடும் அருமைகள்.
கட்டுப்படும் சிறுமைகள்.
பட்டுப்போன கொஞ்சல்கள்.
பாவம் இளம் பிஞ்சுகள்.
அணிமையை மறக்கடித்து
தனிமைக்கு உறவு வைத்து
முதுமையில் தனிமைக்கு
முன்பதிவு செய்வதிது!
பிறக்கும் போதே பாலில்லை.
கரக்கும் பசுந்தானில்லை.
போட்டு நீர் திரவங்கள்
போசாக்கில்லா ஊட்டங்கள்,.
அய்யோ பாவம் குழந்தையே!
குய்யோ முய்யென அழுகுதே!
பால்குடிக்கும் வயதிலே
பாடசாலை போகுதே!
இரண்டு வயதும் இல்லையே!
ஏனோ இந்த தொல்லையே!
தாய் மடியை மறக்குமோ!
ஆயாவிடம் இருக்குமோ!
ஆட்டுக்குட்டி சந்தைக்கு
அடைத்தனுப்பும் நிலைமையோ!
தாயைப்பிரித்து சேயையோ!
தனிமையாக்கும் கொடுமையோ!
பாசத்தை கதற வைத்து
நேசத்தை பதற வைத்து
வாசத்தை காய வைத்து
ஆசையென்ன நீர வைத்து!
பாசத்தை துறந்துவிட்டு
நேசத்தை மறந்துவிட்டு
வாசமில்லா உறவுகளே
தேசமெங்கும் பூக்குமோ!
பாசமில்லா பாலைவனம்.
நேசமில்லா ஓலைவனம்
நிழலறியா அனுபவம்
நிழல் தரவும் மறுக்குமோ!
பாசமில்லா பந்தமோ!
நேசமில்லா சொந்தமோ!
காப்பகங்கள் நிறையுமோ!
கண்ணீரில் கரையுமோ1
அம்மா அப்பா தேடிடும்
அன்பு தேடி வாடிடும்.
பிஞ்சான அரும்புகளை
கொஞ்சவும் கூடலையோ! .
இரண்டு வயதும் ஆனதோ!
ஏடு களைச் சுமக்குதோ!
தாய் பாசம் தொலையுதோ!
தனிக் கல்வி அலையுதோ!
மாலை திரும்பும் பெற்றோரை
மனம் மகிழ்ந்து காணுமுன்
வேளை வந்து உறங்குது
விடிந்து மீண்டும் பிரியுது.
ஐந்து வயதாகும் போது
ஐந்து கிலோ தூக்குது
வீட்டுப் பாடம் எழுதியே
வெறுக்குது உலகையே!
கல்வி கற்றல் அவசியமே!
கருத்து வேறும் இ்ல்லையே.
காலம் பார்த்துச் செய்யுங்கள்
கசங்க வேண்டாம் குழந்தைகள்.
எதிர் காலம் எண்ணியே
எல்லாமே செய்தாலும்
பாவம் நம் குழந்தைகள்
பாசம் தேடி ஏங்குதே!
கொ.பெ.பி.அய்யா.