மக்கும் குப்பைகள்...!! மக்காத குப்பைகள்..! (அஹமது அலி)!
ஐந்தாண்டுக் கொருமுறை
அடிமை படுவதற்கே
ஓட்டளிக்கும் மக்கள்
மக்கும் குப்பைகள்!
ஊழலின் கேண்மையில்
ஊறித் திளைத்த
அரசியல் வா(வியா)திகள்
மக்காத குப்பைகள்.!
...................................................
லஞ்சம் கொடுத்தால் தான்
காரியம் முடியுமென்று
தள்ளப்படும் மக்கள்
மக்கும் குப்பைகள்!
லஞ்சம் பெற்று
கடமையாற்றும்
வஞ்சக அதிகாரிகள்
மக்காத குப்பைகள்!
.....................................................
கல்விச் சா(சோ)லையில்
காசெனும் தீயால்
கருகும் பெற்றோர்கள்
மக்கும் குப்பைகள்!
கல்விக் கூடமெல்லாம்
காசு பறிக்கும்
கூடாரமாக இருப்பதால்
மக்காத குப்பைகள்.!
.................................................
மதுவினிலே மயங்கி
மதிகெட்டு அலையும்
குடிமகன்கள் கூட்டமெல்லாம்
மக்கும் குப்பைகள்!
மதுக்கடைகளை திறந்து
கருவூலங்களை நிரப்பும்
பொறுப்பற்ற அரசாங்கமே
மக்காத குப்பைகள்!
......................................................
போக்குவரத்து விதியை
மதிக்காமல் மீறிச் சென்று
வீம்புக்கு மாள்வோரே
மக்கும் குப்பைகள்!
போக்குவரத்து விதியை மீற
வீதியில் கைநீட்டும்
வழிப்பறி காவலர்களே
மக்காத குப்பைகள்!
...................................................
பணம் கொடுத்துப் பயணித்தும்
பயணப் பரிசாய் பேருந்தில்
பல வசைகளையும்
வாங்கிக் கட்டும் மக்களே
மக்கும் குப்பைகள்!
சில்லரை கேட்டால்
சுள்ளென கடிந்து விழும்
சுருட்டல் நடத்துனர்களே
மக்காத குப்பைகள்!
.........................................................
நூறு நாள் வேலை வாய்ப்பில்
உரிய ஊதியத்தில் பாதியை
இழக்கும் மக்களே
மக்கும் குப்பைகள்!
வியர்வையும் குடித்து விட்டு
விலையாய் ஊதியத்தையும்
உறிஞ்சிக் குடிக்கும்
ஊராட்சி பெருச்சாளிகளே
மக்காத குப்பைகள்!
............................................................
மக்கள் என்றுமே
மக்கும் குப்பையாக....
மக்களை ஏமாற்றும்
மக்களோ என்றென்றும்
மக்காத குப்பையாக...