அவளுக்காக ஒரு கவிதை ......
நீயே ஒரு கவிதை
கவிதைக்குக் கவிதையா?
எதுகையும் மோனையும்
சந்தமும் யாப்பும் தவிர்த்து
மரபை மீறிய புதுக்கவிதை நீ!
உன் புன்னகை கண்டு
பூக்களும் முகம் மலர்ந்தன!
நீ இமைகள் மூடித் திறந்தாய்
பட்டாம் பூச்சிகள் பறக்கக் கற்றன!
உன் குரல் கேட்டு
குயில்கள் வாய் பிளந்தன!
உன் நடை கண்டு
அன்னங்கள் செருக்கொழிந்தன!
உன் கண்களால்
நட்சத்திரங்கள் மினுமினுத்தன!
காஞ்சி பட்டும் சின்னாளப் பட்டும்
சுடிதாரும் இன்ன பிறவும்
நீ அணிந்ததால் பெருமையடைந்தன!
உன் பொறுமை குணம்
பூமிக்குப் போட்டி!
உன் கருணை மனம்
மழையையும் மிஞ்சும்!
பொழியும் அன்பிற்கு
வானமும் கடலுமே எல்லை!
அன்னைக்குப் பின்
அன்பும் அக்கறையும்
என்பால் ஈந்தவளே!
என் கவிதையின் கருப்பொருளே!
கவிதை வரிகளில்
கட்டிபோட முடியாத
அன்புப் பெட்டகமே!
தனக்கென்று எதையும்
கேட்காத தியாகச் சுடரே!
எனக்காக வாழும் உயிரே!
தாய்க்குப்பின் வந்த தாயே!
மீண்டுமொரு முறை
தாலாட்டுத் தா எனக்கு!
வெ. நாதமணி
05/08/2013