வெட்கம் கெட்ட மனிதர்கள்
மனிதராய் பிறந்து விட்டோம்!-நாம்
மனிதர்கள் தானென்று மெய்பிக்க
உடலழகும் உடையழகும்
இருந்தால் மட்டும் போதாது
தன்மானம் என்கின்ற நடையழகுதான்
மிக முக்கியமான முதல் அழகு!
ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையும்
அவனது நடத்தையை வைத்துத்தான்
சரியாக எடைப்போடப் படுகின்றது !
நான் எடைப்போட்ட மனிதர்களில்
இடை மறித்தவர்கள் பலர் !
அவர்களில் வெகுசிலரை மட்டுமே
இங்கு பதிவு செய்ய முயன்றிருக்கிறேன்
இதில் குற்றம் புரியாத மானுட தருமர்கள்
குற்றம் கானின் மன்னிக்க வேண்டுகிறேன்!
மாராப்பு விலகுவதைக்கூட பாராமல்
பராக்கு பார்க்கும் பெண்களும்
அவ்வாறு விலகுகின்ற மாராப்பை
வெறியோடு பார்க்கும் ஆண்களும்
சமூக பார்வையில் காமுகர்களாய்
சல்லாப போர்வைக்குள் மூர்க்கர்களாய்
சரச முத்திரை குத்தப்பட்டு; சைக்கிள் சந்தில்
உரச இடம் தேடுகின்ற காமகொடூரன்கள் !
இடி விழுந்தால் குடி கெட்டுடும் என்று
கொண்ட கொள்கையிலுருந்து விலகி
இலட்சங்களுக்காக இலட்சியங்களை
விட்டுக் கொடுக்கும் சந்தர்ப்பவாதிகள்
கோழையை வீழ்த்திவிட்டு மாடியில் நின்று
யானையை வீழ்த்தியதாய் மார்தட்டும்
மா பாவிகள், மலமுண்ணும் காகரூடிகள்!
விஞ்ஞானத்தை வளர்க்கச் சொன்னால்
அஞ்ஞானத்தை வளர்த்து – தேசத்தில்
அந்நியாயத்தை விளைவிக்கத் தூதுவிட்டு
தேசப் பற்றற்ற அதி தீவிரவாதிகளை-தினம்
ஆயிரக்கணக்கில் ஊக்குவித்துக் கொண்டிருக்கும்
பெரு மதிநுட்பம் நிறைந்த அறிவியலாளர்கள்
அண்டை நாடுகள் வீசியெறியும் டாலர்களுக்காக
சொந்த நாட்டின் இரகசியங்களை கசியவிடும் கருங்காளிகள்!
காக்கிச்சட்டை போட்டுவிட்டால்
இத்தேசமே தன் பாக்கெட்டுக்குள்ளென்று
அதிகாரத் தோரணையில் மிரட்டி
ஏழை என்றும் பாராமல்
எந்த கேசும் போடாமல்
மாமூல் வாங்குகின்ற காவலர்கள்
மாநகர சிக்னல்களில் இடையூறுச்செய்யும்
இரா பிட்சைக்காரர்களின் ஒன்றுவிட்ட பங்காளிகள்!
படித்து பட்டம் பெற்றதே- பட்டினத்து
பணக்கார பெருந்தகைகளுக்காகத்தான்!
பட்டிக்காட்டு பாமரர்களுக்காக அல்ல;
என்ற எலக்காரத்தோடு- மருந்து கம்பெனிகளின்
மனமொத்த ஏஜண்டுகளாக செயல்பட்டு
மாவட்ட தலை நகரங்களிலேயே அன்றாடம்
மாவரைத்துக் கொண்டிருக்கும் சுயநல மருத்துவர்கள்
ஆங்கில மருத்துவத்துறையின் தவிர்க்கமுடியா கருநாகங்கள்!
அறுபதடி நீளமேன்று ஆணை வாங்கி
அய்ம்பதடி நீளத்தோடு முடித்துவிட்டு
கான்ட்ராக்டர்களின் கைப்பாவையாக
அவர்கள் போடும் மிச்சத்தை
பிச்சையாக பெற்றுக் கொண்டு
அரசின் பணத்தை அனாவசியமாய் வீணடிக்கும்
அங்கலாய்ப்பு பிடித்த அரசாங்கப் பொறியாளர்கள்
உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்து
தண்டச் செலவு வைக்கின்ற மண்டைகர்வ மாக்கான்கள்!
மெய்யான வழக்கை பொய்யாக்கி
பொய்யான வழக்கை மெய்யாக்கி
ஏழை என்றால் ஒரு விதி
எஜமான் என்றால் ஒரு விதி
என்று மாறி மாறி வாதிட்டு
சாயம் வெளுக்கும் வக்கீல்கள்
நியாயம் வழங்கும் நீதிபதிகள்
கட்டு பிரம்மம் கை மாறியதும்
வழக்கை திசை திருப்பும்
தீர்ப்பை இழுத்தடிக்கும்
இந்த பொல்லாத பேர்வழிகள்
நாக்கில் நரம்பில்லாத நச்சுகிருமிகள்!
மாத சம்பளத்தை மட்டுமே
எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தால்
இன்றைய காலகட்டத்தில்
சரியாக சம்சாரம் நடத்த முடியாது
ஆகையால்தான் கிடைத்தவரை லாபமென
கிம்பளம் வாங்குகிறோம் என்று
அலட்சியமாய் சொல்லுகின்ற அரசாங்க
மேல்நிலை மற்றும் கடைநிலை ஊழியர்கள்
தவிட்டு புண்ணாக்கில் மேயும் தடைகளற்ற மலப்புழுக்கள்!
தேர்தலின்போது ஊர்வலம் சென்று
ஆயிரமாயிரம் பொய்கள் சொல்லி
அவசர கதியில் வாக்குறுதிகள் தந்து
அசூர பலத்துடன் ஆட்சி அமைத்து
வந்த கோரிக்கைகளை தந்திப்போல் பாவித்து
தந்த வாக்குறுதிகளை தன் சொந்த செலவில்
செய்ததுப்போல், தம்பட்டம் அடித்துக்கொள்ளும்
அண்டைப்புளுகு அரசியல்வாதிகள்
வெந்தப் புண்ணில் வேல்களை பாய்ச்சும்
கந்துவட்டி காரன்போல்; கைமேல் காசுலேயே
சதா குறியாக நிற்கும் பணச்சுரண்டல் பெருச்சாலிகள்!
இப்படி எப்படி எப்படியோ திட்டினாலும்- உங்கள்
திட்டல்கள் எங்களுக்கு சர்க்கரை பொங்கல்கள் என்று
திட்டல்களை காதில் போட்டுக் கொள்ளாமல்
லஞ்ச துட்டு ஒன்றே லட்சியமென்று
மனசாட்சி அற்று வாழுகின்ற
அரசுத்துறை பகல் கொள்ளயர்களை
வெட்கம் கெட்ட மனிதர்கள் என்று
கொட்டு அடித்து சொல்வதற்கு
ஊர் மக்களே ஒன்று திரள்வீர்!
உள்மத்தர்களை ஓட அடிப்பீர் !
இனி யாருக்கும் லஞ்சம் தருவதில்லை என
எவனுக்கும் அஞ்சாமல் ஏகோபித்த குரலில் சூளூரைப்பீர்!