கவரி மான் -உண்மையா? பொய்யா?
கொம்பு உடைய விலங்கு ஒன்றால்
வம்பு பல வந்தது இங்கு
நம்பித் தமிழ் குறள் படித்தால்
தெம்பு தரும் தெளிவு வரும்
மயிர் நீப்பின் வாழா மான்
கவரிமான் என்ற சொல்லில்
உயிர் வாக்கு உரைத்த நல்லோன்
பயிற் மொழியில் பங்கமுண்டோ?
கவரி மான் என்றொரு மான்
புவனம் இதில் இல்லை என்றால்
எகின், ஒதிமம், சவரி எனும்
வனக் குதிரை வகை அதுவே
”யாக்” என்பது மானும் அல்ல
மயிர் நீப்பினும் மாய்வதும் அல்ல
தூக்கி நிறுத்தி உண்மை தேர்ந்தால்
வாக்கு அது பொய்யும் அல்ல.
”சாமரை” என்ற சொல்லை தமிழில்
கவரி என்றே பொருளும் கொள்வர்
வெண்சாமரமோ அரசர் அவையிலும்
கோவிலில் வீசிடும் விசிறி ஆகும்.
சாவக மறையினர் சாலை வழியே
செல்லும் வழியில் வீசிச் செல்வர்
சாமரம் கவரி மான் மயிரதனால்
அமைந்த ராச சின்னம் ஆகும்.
மயிரைத் தந்தும் வாழும் விலங்கதன்
மயிரின் மீதான பெண்கள் பற்றால்
சவுரி முடியென இடுமுடியென ஆகி
குஞ்சமாய் ஆடிடும் பின்னலின் பின்னே.
விலங்கு இனத்தில் பேருடல் கொண்ட
விலங்கினை “மா” எனத் தமிழர் சொல்வர்
அரிமா என்பது சிங்கத்தைக் குறித்தால்
கரிமா என்பது யானையைக் குறிக்கும்.
வள்ளுவன் குறளை எள்ளுதற்க் கில்லை
தெள்ளு தமிழில் தெரிந்தே சொன்னான்
கவரி மா அன்னார் என்றே மனிதர்
உயிர் நீப்பர் மானம் வரின் என்றான்.
சவுரியெனும் இமயக் குளிரில் வாழும்
சவுரியத்தை மயிரே வழங்குதல் போலே
மயிரனைய மாந்தரும் மானம் இழப்பின்
மாய்வர் என்பதை நன்றே சொன்னான்.
நன்றி :திரு. வைரம்
கற்க, நிற்க .ஒர்க்.