வா..மோதிப் பார்க்கலாம்..! பொள்ளாச்சி அபி

எனது சேரி மொழியில்
எனக்குத் தெரிந்ததை எழுதினால்
இலக்கியம் அழுக்காகி விட்டதாய்
எழுதுமிடமெல்லாம் புலம்புகிறாய்..!

இறைவனைப் பாடிய தமிழையும்,
அரசனைப் பாடிய தமிழையும்
இலக்கணப் பிழையாக்கிவிட்டதாய்
இன்றுவரை பசப்புகிறாய்..!

காதலால் மயக்கிய தமிழையும்
காமத்தில் உருகிய தமிழையும்
கவிதையெனப் பிதற்றுகிறாய்..,
காதலர்களைப் பிரிக்கிறாய்..!

என்னை ஒடுக்கும் ஆயுதங்களை
நீ பிரயோகப்படுத்தும்போதெல்லாம்
எனது திமிறலையும்,ஆவேசத்தையும்
ஒற்றுமைக்கு உலைவைப்பதாய்
உளறித்திரிகிறது உனது இலக்கியம்..!

உனது, கையும் காலும் உயிரும்
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
உயிர்மெய் எழுத்தும் ஒன்றாக
இருப்பதுபோலவேதான்
எனக்கும் எல்லாம் இருக்கிறது.!

எனது மொழி
எனது வாழ்வு
எனது எண்ணம்..
என்போக்கில் எழுதினால்
சேரிக்குள் அடைத்துவைத்த
அதே திமிரோடு-என்னை
அடையாளப் படுத்துகிறாய்..!
எழுத்திலும் தீட்டு பார்க்கிறாய்..!

எல்லாவற்றிலும்
உயர்வாய் உன்னைக்
கற்பித்துக் கொள்கிறாய்..!
கணிப்பொறியில் நீ
வித்தகனாயிருக்கலாம்..
கழிப்பிடத்தை சுத்தமாக்கத் தெரியுமா..?
எனக்கு இரண்டும் தெரியும்..,
வா..மோதிப் பார்க்கலாம்..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (7-Aug-13, 11:34 pm)
பார்வை : 172

மேலே