கருப்பு வெள்ளை வானம்

தினமும் காண்கின்ற ஆயிரம் முகங்களிலும்
தெரிவதனைத்தும் உன் முகம் - இருந்தும்,
நிஜத்தில் உன் முகம் ஒருமுறை காட்ட
மறுக்கின்றன என் கண்கள் .

என் கணினியின் ஒரங்களில் தேங்கிக்கொண்டு
என்னோடு சேர்ந்து அழுகின்றன,
பெறுநர் பெயர் நிரப்பப்படாத
என் காதல் கடிதங்கள்.

தொலைந்து போன வயதின் ஏக்கங்கள்,
என்னை உன் முகம் நோக்கி துரத்துகின்றன.
ஆனால் நான் ஒடும் நிலம் என்னவோ,
திசைகளற்ற தேசமாகவே இருக்கிறது.

கற்பனையில் வடித்த உன் வனப்பை வர்ணித்து
என் பேனா ஆனது வரிகளற்று, - உன்
நிலாத்துண்டு புன்னகையை சற்று சிந்தி
வறண்ட பேனாவில் சிறிது மையூற்று.

மணவாழ்க்கையின் நுழைவாயிலில் நின்று
கதவைத் தட்டாமல் காத்திருக்கிறேன் - என்
மனம் அறிந்திராத உன் காதல் வாசம்
என் கைப்பிடித்து இழுத்திடாதா என்று.

இதுவரை காணாத உன் முகம் தந்த
இதயவலிகளை எல்லாம் வரிகளாக்கி விட்டேன்
வானவில்லே, உன் தரிசனம் தனை காட்டு,
என் கறுப்பு வெள்ளை வானில் வர்ணம் தீட்டு.

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (10-Aug-13, 2:40 pm)
பார்வை : 100

மேலே