எத்திசையில் விடியல்-கேஎஸ்கலை

கிழித்தெறியப்பட்ட
கிளிநொச்சியும்
கொள்ளிவைக்கப் பட்ட
முள்ளிவாய்காலும்
பாழாகிப் போன
யாழ்பாணமும்
எழுதிக் கொண்டிருக்கும்
கறைப்படிந்த
சிறைப் புராணங்கள் இவை !
=====
கணவனைத்
தெருவிலே தொலைத்து,
குழந்தையைக்
கருவிலே கலைத்து,
கூற்றனுக்கும் வேண்டா
உயிர் சுமக்கும் கூடுகளின்
கேட்டினைச் சுமக்கும் நாடிது...!

பகலவனை
கும்பிக்குள் குடியிருத்தி
உடல் கொளுத்தி,
பத்தினிகள் அடகாகி...
பட்டினியைப் போக்கிக் கொள்ள
பலருக்கும் “பசிப்”
போக்கிக் கொண்டிருக்கிறார்கள் !

கலாச்சாரம் காத்து
வியாபாரம் செய்த காலம் போய்
கள்ளச்சாராயம் காய்த்து
விபச்சாரம் செய்துக் கொண்டு
விடிவிலா திசை நோக்கி
விரைந்துக் கொண்டிருக்கிறது...
====
கடல்தாண்டி வந்திறங்கி
நகரத்து மத்தியில்
சொகுசு மாடிகளில்
கூத்தாடும் தமிழர்களுக்கு –
நரகத்தின் மத்தியில்
முகாம் வேலிக்குள்
முடங்கிக் கிடக்கும் உறவுகளின்
முகாரி ராகங்கள்
கேட்பதேயில்லை !

அக்கறையின் விலாசங்கள்
காரமாக, கரிசனையாக
அக்கரையிலேயே நின்று
அப்படியே திரும்பிவிடுகிறது !
=====
திருவோடு ஏந்தி
தெருவோடுப் போனாலும்
ஒரு நேர இரைக்கு
இரு காசு கொடுக்க
ஈரமிலா வீதிகளில்
பாரம் தாளாமல் துவளும்
பிறப்பூர் பரதேசிகளின்
பிச்சைக் கோலங்கள் !

வாழ்வுக்கும் சாவுக்கும்
இடையிலே அல்லற்படும்
ஏழைகளின்
கீற்றுக் குடிசைக்கும்
சோற்றுப் பருக்கைக்கும்
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி
அறிக்கைவிட்டு அலைகிறார்கள்...
நல்லூர் கந்தனுக்கும்
நயினை நாகபூசனிக்கும்
அள்ளிக் கொடுக்கும்
அயோக்கியர்கள் !
====
கந்தகத் தீயில் வெந்து
கருகிய வாழ்க்கைக்கு
குந்தகம் செய்து
குடித்தனம் நடத்தும்
கயமை நெஞ்சத்தாரின்
தேர்தல் சிரிப்போடு அரங்கேறும்
கபட நாடகங்கள்
அரசியல் மேடைகளில் !

பூசி மெழுகி
மக்களைத் தழுவி
வாக்கு வாங்கி
வாகைச் சூடியப்பின்
காய்ந்த வயிறு கருகிக் கிடக்க
மக்களைக் -
கைக்கழுவியப் பாவத்தோடு
சுவிஸ் வங்கி பெருகிக் கிடக்கும் !

விக்கினங்கள் தீர்த்து
விடியலும் விடுதலையும்
வாசலுக்கே தருவதாக
முன் மொழிந்தும் - பின் வழிந்தும்
வாக்கு கேட்டு வருகின்ற
அவாச்சியர்களே - எங்களுக்கு
வீடே இல்லை வாசல் ஏதடா ?
====
அச்சமில்லை அச்சமில்லை
என்று சொன்ன தமிழனுக்கு
இன்றேதும்
மிச்சமில்லை மிச்சமில்லை !

நாறிப்போன தேசத்தில்
ரத்தச் சகதியில் வீழ்ந்து
ஊறிப்போன கண்கள் தேடுகிறது
விடியலின் முகவரி
எத்திசையில் பிறக்குமென்று !

எழுதியவர் : கே.எஸ்.கலை (14-Aug-13, 9:45 am)
பார்வை : 791

மேலே