~~~~~~~சிங்கம்~~~~~~~~

யாளியின் பெருமையும் பெயரும்
ஆயிரம் இருக்கு சொல்ல
நாலாம் அவதார நாயகன்
விட்டுணு எடுத்தான் கொல்ல.
நார்னிய நாளேட்டுக் கதையில்
சிரசினை உயர்த்திச் சிரத்தும்
சிங்கம் கடவுளே என்பது
சியெஸ்.லூயிஸின் அழுத்தம்

“அரி”யெனும் ஒரு பெயருக்கு
ஐம்பது பொருட்கள் உண்டாம்
புரியென தமிழுடன் நல்ல
சமஸ்கிருத மொழியும் சொல்லும்
நாளிலே இருபது மணிகள்
தூங்கியே கழிக்கும் விலங்கு
வாலினால் சொல்லும் சேதி
வந்தடை சுற்றத் தார்க்கு.

தரையிலே தாளினைத் தடவி
நடையெனப் பழகும் போது
பூமியில் குதிக்கால் படாமல்
நடப்பதே கம்பீரத் தோற்றம்
எள்ளளவும் சிரமம் இன்றி
ஏறிட்ட சிறிய தூரம்
துள்ளியே ஐம்பது மைல்கல்
வேகத்தில் விரையும் பாங்கும்

வெள்ளியைக் காண்பது போலே
இரையதன் அலங்கல் தன்னை
வெள்ளைக் கருப்பு நிறத்தில்
தேர்ந்து தெளியும் ”தெரிமா”
ஆளுமை செய்து காட்டை
“ஆளி”யென்ற பெயர் தாங்கி
அரசனாய் விளங்கி நி்ற்கும்
“கோண்மா” “கோவிலங்கு” ஆகும்.

ஆடிடும் வேட்டை தன்னில்
வன்முறை செய்யும் செயலால்
“வடபுலி””வயபுலி” என்னும்
“மறப்புலி””மாபுலி” ஆகும்.
புல்வெளி சமவெளி சூழல்
புகலிடம் கொண்டு வாழும்
“வயமா””வன்மான்” இங்கு
“வாளரி””கோளரி” என்றாகும்.

புஜபலம் கொண்ட அளவில்
“பூட்கை” என அழைக்கப்படும்
பூபதி பெட்டை முன்னே
பேடியாய் விட்டுக் கொடுக்கும்.
பிடரியின் கருமை கொண்டு
அகவையை அளந்திட லாகும்
அடலேறு ஆணுக்கு அந்த
அழகுண்டு பெண்ணுக்கு அல்ல.

பெருமிதம் என்று சொல்லும்
குழுவெனக் கூடி வாழும்
பெரியவை ஐந்து என்றால்
குட்டிகள் பத்து இருக்கும்.
உருமிடும் கர்ஜனை காட்டில்
ஐந்துகல் தொலைவு கேட்கும்
உருத்திரம் கொண்டு அறைந்தால்
உயிரெலாம் உறைந்து போகும்.

பருகிடா ஐந்து நாட்கள்
பட்டினி கிடந்தும் கூட
“அறுகு” எனும் ஆண் சிங்கம்
சுற்றத்தைக் கட்டிக் காக்கும்
வாட்டத்தைப் போக்கிட பெண்ணே
வேட்டை ஆடிடச் செல்லும்
“மடங்கல்” ஆண்சிங்கம் மட்டும்
முதலிலே இரையை உண்ணும்.

(மேற்கோள் குறிக்குள் உள்ள பெயர்கள் அனைத்தும் சிங்கம் எனப் பொருள் படும்)

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (16-Aug-13, 12:56 pm)
பார்வை : 107

மேலே