காயும் ஈரம்...(21-ஆம் நூற்றாண்டின் புதுச்சேரியின் சிறந்த சிறுகதை

“ஏலேய் சாமா ஷண நேரம் தப்பிப் போயிட்டுது ஒன்னோட ஜாதகத்திலே..இல்லேன்னா ,ஒன்னோட தேஜஸ்க்கு பெரிய வாத்யாரா ஆகி இருப்பேடா நீ!...” பெரும்பாலும் பல வாத்யார்களும் இப்படி சாமாவை கிண்டலடிப்பதுண்டு.

“வந்துட்டன்... நான் இதோ வந்துட்டன்...” என்றுக் குரல் கொடுத்துக் கொண்டே ஓடி வந்தான் சாமா. வந்தவன் பார்வையில் சட்டென்று முதலில் பட்டது கனகாதான்!

“இளமையிலேயே அதுவும் வாளிப்பான உடற்கட்டும் ரத்தம் சுண்டும் சிவப்பு நிறத்தோலும், வளர்த்தியான உடம்போடு ஒரு விதவையாகிறக் கொடுமை இந்த லோகத்திலே எந்தக் பெண்டுக்கும் வரக்கூடாது பகவானே” என்று கனகாவைப் பார்க்கும் போதெல்லாம் சாமா மனதிற்குள் பிராத்தித்துக் கொள்வதுண்டு.

சின்ன மன்னிதான் கிடுகிடுவென்று வேலை பார்த்தாள்.

சுப்பு சாஸ்திரி அருகில் ஒரு பெரிய வாழை இலை போடப்பட்டு அதில் பலவகையான பதார்த்தங்களோடு கூடிய சாதம் பரிமாறிப் போனாள்! அவள் கைப் பக்குவம், சுப்பு சாஸ்திரிக்கு மிகுந்த விருப்பம்!

சுப்பு சாஸ்திரியின் கையில் சுற்றப்பட்ட ஒரு கயிற்றைத் தன் கைகளில் பிடித்தவாறே சாமா பிணத்தின் அருகில் சாப்பிடத் தொடங்கினான்.

“மற்ற சாதாரண நாட்களில், தான் என்ன தான் – அவ்வளவு பசியோடு துடித்தாலும், ஒரு சிலர் ஆத்துக்கு ­குறிப்பா போய் சாப்பாட்டு நேரத்லே நின்னாலும் ஏதோ காமா சோமான்னு சாதம் போடறவா எல்லாமே இந்த திவம்சம் மற்றும் எழவு வேளைகளில் என்னமாய் நேக்கு விருந்துப் படைக்கிறா” என்று மனத்தில் அசை போட்டவாறு உண்டு முடித்தான் சாமா, வேக வேகமாக பஞ்சத்தில் அடிப்பட்டு போன ஆண்டிக்கணக்காய்!

மற்றக் காரியங்கள் எல்லாம் வெகு சீக்கிரமாக நடக்கத் தொடங்கிவிட்டன.

*****
பின் கட்டில் உள்ள கிணற்றடிக்கு வந்த சாமாவை அங்கு இருந்த கனகா நேருக்கு நேராய் பார்த்துக் கொண்டாள்!

தன் கணவனின் இறப்பின் போதும், தன் தாயின் இறப்பின் போதும் இதே சாமாதான் பிராமணார்த்தம் செய்தான்!

“ எப்படி இருக்கே...” கரகரத்த குரலில் கேட்டுவிட்டு உள்ளே போனான் சாமா.

கனகா மெளனமாய் விழி மாற்றினாள்....
ஒரு கேள்வி கேட்கப்பட வேண்டும் – ஒரு பதில் அளிக்க வேண்டும் – அது வேறொரு கேள்வியாகக் கூட இருக்கலாம் அம்மட்டும் தான் அந்த உறவு.

வைக்கோல் எடுத்து மாடுகளுக்குப் போட்டானா வேலைக்காரன் என்பதைப் பார்க்க வைக்கோற்போர் பக்கம் போன கனகாவின் காதுகளில் பெரிய அண்ணாவும் மன்னியும் பேசிக் கொண்டு இருப்பது கேட்டது.

“எப்படி... இன்னும் காரியங்களே முடிஞ்சபாடில்லை தகனமும் ஆகலை அதுக்குள்ளே சபையிலே சொல்லணும்னா எப்படி?”

“இந்தாங்கோ... யாரு எக்கேடு கெட்டுப் போனா நமக்கென்ன? நமக்கு வேண்டிய தெல்லாம் பணம். சொத்து கிடைக்க இதை விட்டா வேறே வழியே இல்லை”.

“அதில்லடி... வருஷாப்பித்திகம் முடிக்கிறதுக்குள்ளே... சுப காரியம்... எப்படி...”

“எல்லாத்துக்கும் தான் பரிகாரம் இருக்கே! பண்ணிடுவோம். நான் மட்டும் அந்த சமயம் பொறந்தாத்துக்குப் போகாம இருந்திருந்தா அந்த கிழத்தை இப்படி உயில் எழுத வைச்சு இருப்பேனா... அசமந்தமா நீங்கள் எல்லாம் விட்டுட்டேள்”

“சுமங்களியா போன என் அம்மாவை ஏண்டி இப்படி கரிச்சுக் கொட்டறாய்”

“ஆமா... போறவ போனாளே சும்மா போகக் கூடாது. தம் பொண்ணுக்கு மறுகல்யாணம் பண்ணி வைச்சப் பிறகு தான் சொத்தை எல்லாம் பிரிக்கணுமிட்டு உயில் எழுதி வைச்சி போயிட்டா... போங்கோ மொதல்ல போய் சபையிலே சொல்லுங்கோ...”

“ஏண்டி... ஏதோ அம்மா அசட்டுத்தனமா எழுதிட்டான்னு இப்போ போய் சபையில சொன்னா... யாருடி கனகாவை கல்யாணம் பண்ணிப்பா? வேணும்னா கனகாவையே இன்னொரு தரம் கேட்டு..........”

“அதான் நீங்களும் உங்க தோப்பனாரும் ஒரு தடவை கேட்டேளே... சொன்னாளே அவோ! போங்கோ, போய் அந்த சவுண்டி சாமாவையை பண்ணி வையுங்கோ... கல்லுரல் மாதிரி அவனும் தீர்க்காயுசா இருந்துண்டு நம்ப சொத்துலேயும் பிராப்தி பண்ணிண்டு ஜமாய்ப்பான்... நோக்கும் ரொம்ப பீத்தலா இருக்கும். வேதபிதாமக சாஸ்திர சாம்ராட் சுப்புசாஸ்திரிக்கு ஒரு சவுண்டி மாப்பிள்ளை ­ அவனுக்கு நீங்க...”

“வாயை சித்த மூடுடி... நம்ப சாஸ்திர வைதீகத்திற்கு சும்மா யாருடி கிடைப்பா... அதுவும் இளவயசுக்காரன் கனகாவிற்கு ஏத்த மாதிரி...?"

“அறுத்துப் போன கம்மனாட்டிக்கு வயசு என்ன கேடு? கூடப்படுத்து ஒரு வாரிசு கொடுக்க ஒரு ஆம்படையான் வேணும் அவளுக்கு... அவ்வளவு தானே! ஏன் கோபால் சாஸ்திரிக்கு என்ன குறைச்சல்...?”

“ஏன்டி என்ன பேத்தற... சாஸ்திரிக்கு அந்திம காலம்டி... இந்த வயசிலே... கனகாவை அவருக்கு... ஏய் இது அநியாயம்டி...”

“ஏன்னா, இங்க பாருங்கோ... இந்த ஊரிலே நமக்கு அடுத்த சொத்துப்பத்து எல்லாம் அதிகம் வைச்சு இருக்கிற மனுஷா கோபால் சாஸ்திரிகள் தான். அவரோட ஒரே பையனும் வெள்ளைக்காரியைக் கல்யாணம் பண்ணிண்டு ஏதோ எழவெடுத்த நாட்டிலேயே தங்கிட்டான்... அந்தக் கிழம் கொஞ்ச நாள் கனகாவோடு இருந்துட்டு பிராணன் விட்டுடும் . எல்லா சொத்தும் கனகாவுக்குத் தானே வரும். என்னம்மா கனகாவை அன்னைக்கு படித்துறையிலேப் பார்த்துட்டு அசடு வழிந்தது தெரியுமா? அன்னைக்கே நான் பேசிட்டேன். கல்யாணம் ஆன கையொடு அந்த தெற்கால இருக்கும் நன்செய் நிலத்தை நமக்கு தானம்மா கொடுக்கறேனிட்டு கிழம் சொல்லிட்டு... போங்கோ போய் சபையிலே இப்பசொல்லிடுங்கோ... இதுக்கு ஒத்துண்டாத்தான் கொள்ளி வைப்பேனிட்டு சொல்லிடுங்கோ. சின்னவர் என் சொல்லை தட்டமாட்டார். நேக்கு நன்னாத் தெரியும்!!!!.”

என்னமாய் மன்னி பேசுகிறாள்...

கூனி கைகேயி, சகுனி எல்லாம் சேர்ந்து உருவான படைப்போ இந்த சண்டாளி... இப்படி கொட்டி வைக்கிறாளே... அம்மா நான் என்ன செய்யட்டும். அம்பது வயசு கிழத்தோடு நானா?.....கனகா மனதில் புழுங்கினாள்...கனகாவின் கண்களில் கண்ணீர் திரண்டது. தன் தந்தை தனக்கு எப்போதோ சொல்லிக் கொடுத்த அட்சரம் நினைவுக்கு வந்தது.

புருஷகிம் ஸ்வபிஷி
பயம்மே ஸமு பஸ்திகம்
யதி சத்யம சக்யம் சா
தன்மே பகவதி சமய...
(- “எனக்கு ஏற்பட்டு இருக்கும் பயத்தை என்னால் போக்க முடியுமோ முடியாதோ... ஆனால் நீதான் பயத்தைப் போக்க வேண்டும்.”)

தீர்க்கமான முடிவுக்கு வந்த கனகா தன் தாயும் தந்தையும் தனக்கு வழிகாட்டுவார்கள் என்று எண்ணியபடி சந்தடியில்லாமல் ரேழிக்குள் வந்தமர்ந்தாள்.

சின்ன அண்ணா வாத்யாரின் அட்சரங்களுக்கு சம வேகமாய் ஈடு கொடுக்க முடியாமல் நாக்கு குழற ஒப்பேத்திக் கொண்டு இருந்தான், மந்திரங்களை!

கோபால சாஸ்திரிகள் தன்னையே விழுங்கி விடுவதுபோல பார்ப்பதாகத் தோன்றியது கனகாவுக்கு!

சபையிலே மூக்கைச் சிந்தியவாறு மன்னி பேசினாள் “ஏதோ... தான் இருக்கிற வரை வைராக்கியமா இருந்துட்டு பிராணன் போகும் போது கனகாவுக்கு மறு கல்யாணம் பண்ணிக்க உத்தரவு கொடுத்துட்டார் மாமா.......
வேணுமின்னே இழுத்தாள் மன்னி!

“சரி... அதையெல்லாம் தகனம் முடிச்சுப் புண்ணியார்த்தம் பண்ணினப் பிறகு பார்த்துக்கலாமே...” கிட்டய்யர் சொன்னதை சடாரென்று மறுத்த,

“ஆமா... சுமங்கலிக்கு கல்யாணம் பண்ணப் போறோம் நாள் நட்சத்திரம் பார்க்க... எல்லாம் கம்மானட்டிக்கு எழுவு வீடுதான் மங்களகரமான இடம்... ஏன்னா , மதமதன்னு நிக்கிறேன்... சொல்லுங்கோ...”

“மாமா , அப்பா ஆத்மாவும் சாந்தி அடையுணும் இல்லே... அதுதான் நம்ப கோபால சாஸ்திரிக்கு கனகாவை கொடுக்கரலாம்ணிட்டு..." இழுத்தான் முடியாமல் பெரிய அண்ணன்!

“கனகா... இதலே நோக்கு...” கிட்டய்யர் கேட்டார்.

“மாமா... சித்த அக்காணிட்டு இருங்கோ! தோப்பனார் பிணத்திற்கு முன்னால எப்படி வாய் திறந்து அவோ சொல்லுவோ..? அதெல்லாம் மன்னி ஏற்கனவே கனகாவிட்ட பேசி இருப்போ!” தன்தலையில் பாரமாய் வந்து கனகா விழுந்திடக் கூடாது என்றும், ஆபீஸ்ல அந்த குட்டைக்கவுன் காரிக்கு செலவுப் பண்ண சொத்லே பங்கு வேணும் என்பதாலும் சின்ன அண்ணா சாமார்த்தியமாகப் பேசினான்.

இன்னமும், இவர்களின் வக்கிரத்திற்கு ஆளாகி தான் அவமானப்பட வேண்டாம் என்று கனகா வாய் திறந்து “மாமா இப்பவே நாள் குறிச்சுடுங்கோ” சொன்னாள்.

பெரிய அண்ணனை ஒரு இடி இடித்து “பார்த்தேளா... எப்படி அலையறான்னிட்டு நீட்டி முழுங்கி அந்த
லம்பாடிக்கு வக்காலத்து வாங்கினேள்ளே!... இப்ப என்னச் சொல்றேள் ?”... முணுமுணுத்தாள் மன்னி.

கிணற்றடியில் தன் தலைக்கு நீர் ஊற்றிக் கொண்டு வந்தமர்ந்த கிட்டய்யர் நாள் பார்த்துச் சொன்னார்!

அமங்களத்தில் ஒரு மங்களத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு முடித்திட்ட சுப்பு சாஸ்திரியின் அந்திம பயணம் தொடங்கியது.
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர


(தொடரும்.....)

எழுதியவர் : அகன் (16-Aug-13, 2:08 pm)
பார்வை : 86

சிறந்த கவிதைகள்

மேலே