சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்

ஒரு ஊரில், தாய், தந்தை, மகன் என ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்து வந்தது. அம்மகன் சுமார் மூன்று வயது நிரம்பப்பெற்றவன். ஆனால், அவனோ அளவிற்கதிகமாய் சீனியை (சர்க்கரை) உண்பதால், எலும்புருக்கி நோய் தொடரப்பெற்றான். அவனது பெற்றோர், அவனைக் காட்டாத மருத்துவர் இல்லை. ஆனால் அனைத்து மருத்துவர்களும் முதலில் கூறுவது, அவர்கள் மகனது சர்க்கரை உண்ணும் பழக்கத்தை விட்டொழிப்பதயே. ஆனால் அவனோ, அதை மட்டும் விடவில்லை. பிறகென்ன, நோயும் அவனை விடவில்லை.
காலங்கள் நகர்ந்தன. காட்சிகள் மாறின. அவர்களது மகனும் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான்.
ஒரு நாள், அவர்களது ஊருக்கு ஒரு மகான் வந்தார். அவர் திருநீரிட்டால் தீராத நோயும் தீருமாம் என்று யாரோ கூற, அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதில் கடைசியாய் நமது கதாநாயகியும், அவரது மகனும் காத்திருந்து ஒரு வழியாய் மூன்று, நான்கு மணிநேரத்திற்குப்பிறகு அவரைக் கண்டு தரிசனம் பெற்றனர். அப்போது அந்த தாயும், தனது குழந்தையின் நோய் பற்றி அவரிடம் கூறி, அந்த நோய் விலக வேண்டுமானால் அக்குழந்தை சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தவேண்டும் எனவும், அதனால் தன் மகனுக்கு நல் புத்திமதிகளைக் கூற வேண்டினாள். ஆனால் அவரோ, அம்மா நீ இன்று போய் நாளை வா என்றார். அவளும், சரி இன்றைக்கு நேரம் முடிந்துவிட்டது போலும், அதனால் நாளை வரச்சொல்கிறார் என்றெண்ணி, மறுநாள் வரத்திட்டமிட்டாள்.
மறுநாள், கிட்டத்தட்ட நேற்று போலவே மக்கள் கூட்டத்தால் கடைசியில் தள்ளப்பட்டாள். தன் முறை வந்தபோது, அம்மகானும் அவளைப்பார்த்து அம்மா, நீ இன்று போய் நாளை வா என்றார். அச்செயலால், சிறிது கோபமுற்ற அத்தாயும், தன் கோபத்தை வெளிக்காட்டாமல், சரி நாளை ஏதேனும் மருந்து தருவார் போலும் என அடுத்த நாள் வர எண்ணினாள்.
அடுத்த நாளும், மக்கள் கூட்டத்தால் கடைசியில்தான் மகானை சந்திக்க நேர்ந்தது. உடல் துவண்டாலும், உள்ளம் துவளாமல் அவள் மகானைப் பார்க்க, அவரும் வழக்கம் போல அடுத்த நாள் வரக்கூறினார். அவளோ எண்ணிலாக் கோபமடைந்தாள். மீண்டும் மனதைத் தேற்றிக்கொண்டு, நாளையே கடைசி என்றும், நாளையும் இதே பதில் எனில் மகானை ஒருகை பார்த்துவிடுவதெனவும் எண்ணிக்கொண்டு அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.
மறுநாள், அத்தாயும் மகானை சந்திக்கச் சென்றாள். மகானும் இம்முறை அவளது குழந்தையை வாங்கி, தன் மடிமீது இறுத்தி, "மகனே சர்க்கரையை அதிகமாக உண்ணக்கூடாது" என்று அவனைப் பார்த்துக் கனிவுடன் கூறி பின் குழந்தையை அவளிடம் கொடுத்து, அம்மா இனிமேல் உன் குழந்தை சர்க்கரையை அளவுக்கதிகமாக உண்ணாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டுத் தன் பணியினைத் தொடர்ந்தார். அவளுக்கோ அவரின் செயல் சப்பென்றாகிவிட்டது. இதற்காகவா இத்தனைநாள் கால் கடுக்க நின்று இவரைத் தரிசிக்க வந்தேன் என்று அவளது மனது ஓலமிட நடையைக் கட்டினாள் வீட்டைநோக்கி.
ஆனால் என்ன ஆச்சரியம், அவளின் குழந்தையோ சர்க்கரையை அதிகமாக உண்ணவில்லை. அவளுக்கோ இருப்புக்கொள்ளவில்லை. மகான் செய்த மந்திரம் தான் என்ன? அதை அவரிடமே கேட்க அன்று முழுவதும் பொறுக்கவேண்டுமே என்று பொறுமை இழந்தாள்.
மறுநாள் விடிந்தது. அத்தாயும் தனது அனைத்து வேலைகளையும் ஒத்திவைத்துவிட்டு, மகானை சந்திக்க விரைந்து சென்றாள். அவள் முறை வந்ததும் மகானை வீழ்ந்து வணங்கினாள். தன் குழந்தையின் மாற்றம் குறித்துக் கூறி, இம்மாற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளது என்றும் கூறினாள். அதற்கு அவரும், தாயே சர்க்கரையை விட்டொழிக்க எனக்கு நான்கு நாட்கள் ஆயின என்றார் புன்முறுவலுடன்......
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன். (18-Aug-13, 12:00 am)
பார்வை : 498

மேலே