மாபாரதத்தில் கர்ணனின் கொடை (கொடை அளிக்க முன்வருவோர் கட்டாயம் படிக்கவேண்டியது)

மழை கொடுக்கும் கொடயுமொரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடயுமொரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடயுமொரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்

என்றும்

நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடு தோறும் நடந்து சிவந்தன நாவலர் கால்கள்
நற்பொருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்
தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது
கர்ண மாமன்னன் திருக்கரமே - நன்றி கர்ணன் திரைப்படம்,

என்பதன் மூலம் கர்ணனின் கொடைத்தன்மையை அறியாதவரும் அறியலாம். அப்பேர்ப்பட்ட கர்ணனைப் பார்க்க வருபவர்கள் எப்பேர்ப்பட்டவர்களாயிருந்தாலும், அவர்கள் கர்ணனின் அழைப்பு இருந்தால் மட்டுமே அவனைப் பார்க்க இயலுமாம்.
ஆனால் வறியவர்களுக்கு மட்டும் இதில் விலக்கு உண்டு. அவர்கள் எந்த சூழ்நிலையிலும், எந்த நேரத்திலும் கர்ண மகாராஜாவை முன் அனுமதியின்றி பார்க்க கர்ணன் ஆணையிட்டிருந்தான்.
ஒருநாள் கர்ணன் எண்ணைக்குளியல் எடுத்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் வந்த ஒரு வறியவரை, வாயிற்காப்போனும் தடுக்காமல் உள்ளே அனுப்பிவைக்க, அவ்வறியவரும், எந்த ஒரு ஆபரணமும் பூணாத நிலையில், இடுப்பில் ஒரு துண்டு மட்டும் இருக்க, தங்கக் கிண்ணத்தில் எண்ணையோடு வேலையாட்கள் அரசனுக்கு எண்ணை தேய்த்து விட்டுக்கொண்டிருக்க, கர்ணனைக் கண்டார்.
கண்டதும் கை கூப்பினார். கர்ணனும் முறுவல் பூக்க, வாருங்கள் வறியவரே என்று அவரை அழைத்து, தன்னுடம்பில் அணிகலன்கள் ஏதுமின்றி தான் இருப்பதை மறந்து, என்ன வேண்டும் என்று அவரைக் கேட்டான்.
வறியவரும், தன வறுமையைக் கூறி, உதவுமாறு வேண்டினார். உடனே தேய்ந்து சிவந்த கர்ண மாமன்னன் திருக்கரங்கள், தனது உடம்பைத் தடவின. அப்போதுதான் தன்னிலை உணர்ந்து, எங்கே தனது சொல்லை, உடனே நிறைவேற்ற இயலாமல் போனதோ என்று கலக்கமுற்றான்.
சுற்றி முற்றிப் பார்த்த கர்ணன், தனது இடதுகைப்பக்கம் எண்ணை தேய்த்துக்கொண்டிருந்த வேலையாளின் கையில், தங்கக் கிண்ணம் ஒன்றிருப்பதை கண்டு மகிழ்ந்தான். உடனே, தனது இடது கையால் அக்கிண்ணத்தை வாங்கி, இடது கையாலேயே அதை அவ்வறியவருக்கு அளித்தான்.
அவரும் அவனை வாழ்த்தி, பின்னர் தனக்கு ஒரு விஷயத்தில் சிறிது முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்று கர்ணனிடம் தெரிவித்தார்.
அவனும் என்னவென வினவ, அதற்கு வறியவர்,
இடது கையால் தான, தர்மங்கள் செய்யலாமா? என்று வினவினார்.
உடனே இடிச்சிரிப்பை உதிர்த்த கர்ண மகாராஜன்,
வறியவரே! நான் இடது கையால் இப்போது தானம் செய்ததைத் தானே வினவுகிறீர்கள். இச்செயல் தவறில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், இடது கையிலிருந்த தங்கக் கிண்ணத்தை எனது வலது கைக்கு மாற்றுவதற்குள், எனது மனம், இவ்வறியவருக்கு இந்த தங்கக் கிண்ணம் தேவைதானா? இதைவிட குறைந்த மதிப்பில் இவருக்கு ஏதாவது கொடுக்கலாமே - என்று மாறிவிடும் முன்பே தானத்தைச் செய்யவே எனது இடது கை தானம் நடந்தேறியது என்றாராம். (காலம் சென்ற புலவர் கீரன் அவர்கள் சொற்பொழிவிலிருந்து கேட்ட ஞாபகம்)

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன் (18-Aug-13, 8:51 am)
பார்வை : 781

மேலே