சேரியிலிருந்து ஒரு கடிதம்
அன்புள்ள அம்மாவுக்கு
ஆசைமகள் எழுதுவது
சுகமாக நானிருக்கேன்
உன் -சுகமறிய
தவமிருக்கேன்
கடைசியா நீ போட்ட
காகிதம் கெடச்சிருச்சி
காசும் கெடச்சிருச்சி ..
பக்கத்துக்கு வீட்டு
பரமசிவம் மாமிகிட்ட
சித்திரப் பொறப்புக்கு நீ
ஐந்நூறு கடனேடுத்தாம்
முத்திப் போன கடனென்று
வட்டி
முன்னூறும் அவ கேட்டா ..
முந்தாநாள் காலையிலே
பீலியிலே முகம்கழுவி
வாளியிலே நீர்நிரப்பி
மலையெரங்கி வரும்போது
பாசியில கால்வழுக்கி
பாறையிலே விழுந்துட்டேன்
இடுப்பில நல்ல அடி
இன்னும் கூட குறையலம்மா
விடாம கொட்டும் மழையால
வீடெல்லாம் ஒழுகுதம்மா
பாத்திரம் தேடி வைச்சே
பாதி உயிர் போகுதம்மா
காயாத விறகு ஊதி
வாயெல்லாம் வலிக்குதம்மா
புகையிலே நான் சமைச்சி
கண்கூட எரியுதம்மா !
போனமாசம் ஒருநாளு
அந்திசாஞ்சி
ஆறுமணி கழிந்திருக்கும்
அரிக்கால் போத்தல் எண்ணெய் வாங்க
சந்திக் கடை போனேன்மா
சந்திக் கடை மூத்தம்மா
எதையோ கண்டு திகைத்ததுபோல்
பேயிறங்கும் நேரத்துல
ஒத்தையிலே நீ எங்க
வந்த புள்ள என்று
இசையா வசை பாடினாம்மா
உண்மையாவே -இங்க
பேய் இருக்காம்மா ??
முக்கியமா ஒரு செய்தி
எழுதவென்று மெனக்கெட்டு
அத மறந்து போனேன்மா !
நீ
கடைசியாய் வங்கித் தந்த
கண்ணாடிவளையல்
காணாமல் போச்சிதம்மா
வரும்போது இன்னொன்று
வாங்கிட்டு நீ வாம்மா .
கணக்கு நோட்டும்
தீர்ந்து போச்சிமா
காசு கேட்டு நான் நின்னா
குச்சி பொறுக்கி வந்த அப்பா
குடிபேதையில் ஏசுறாரு
பொம்மளப் பிள்ளைக்கி
படிப்பு எதுக்கெண்டு
அடிக்க ஓடி வாறாரு
விலகியே நான் போறேன் !
வெள்ளை சட்டையிலே
விறகு நாத்தம் அடிக்கிதம்மா
இலவச துணியெடுத்து -அப்பா
கள்ளு குடிச்சாரும்மா !!!
அம்மா !!!!!!
பள்ளிக்கு
புதிசாய் ஒரு தலைமை வாத்தி
சீமையிலேந்து வந்திருக்காரு
நீ இருக்கும் ஜோர்தானு
சீமையவிடப் பெரிசாம்மா .
பகலில் படிக்க நேரம்
இல்லையம்மா
இரவில் குடிகாரர் தொல்லையிங்கே
ரோதணையாப் போச்சுதம்மா
நெனைப்பு வரும்போது
டிரங்கு பெட்டுக்குள்ள
உன் பழைய சட்டையெடுத்து
மெல்ல முகர்ந்து பார்ப்பேன்மா!
நீ இல்லா வீடிங்கே
பேய் வீடாப் போச்சும்மா
நடுஇரவும் ஆச்சிம்மா
மண்ணெண்ணெய் தீர்த்தும் போச்சிம்மா
தூக்கம் எனக்கும் வருதும்மா
சீக்கிரமா நீ வாம்மா ..