கானாச்சென்னை!

நானாப் போனாத்தானா--வரும்
கானாப் பாட்டுத்தானா.
தேனா ஆனக்கானாச்--சொல்லும்
சென்ன ஆனா ஆவனத்தானா.

சென்னை மக்கள் பேச்சு--அது
அன்னைத் தமிழ் மூச்சு.
மழலைத்தமிழ் அழகு--அதை
மனம் மகிழப் பழகு.

பல மொழிகள் பேசும்--இது
பாரதத்தின் விலாசம்.
இந்தியத்தின் ஒருமை--அது
இங்குதானே அருமை.

வெள்ளக்காரன் வந்தான்--இதை
விலைக்கு வாங்கிக் கொண்டான்.
சென்ன நாக்கர் பூமி--இது
சென்னப்பட்டணம் சாமி.

வெள்ளக்காரன் வல்லே-இன்று
இல்லே இங்கே சென்னை!
அள்ளுகிறார் கொள்ளை--விற்று
அடிக்கணக்கில் மண்ணை!

மாநகரம் என்றால் மதராசே--என்பார்
ஆனமுதல் மாநகராம் அது
அனைத்திந்திய புகழாம்--என்றும்
அது நமக்குப் பேராம்.

சோழ பல்லவத் தமிழாட்சி--நகர்
சூழக் கோவில் உருவாச்சி.
கலை வளர்ந்த ஊராம்--இன்றும்
கலைத் தமிழ் தேராம்.

நாலு நூறு ஆண்டு-எட்டும்
நமது சென்னை உதயம்..
ஓடும் இரு ஆறுகள்--ஊடே
ஆளும் சார்ச் கோட்டைகள்.

கல்விக்கான கழகங்கள்--இங்கு
காலம் வென்ற சின்னங்கள்.
சொல்லித்தரும் பெருமைகள்-எங்கும்
அள்ளித்தரும் செல்வங்கள்.

கோவிலுன்னா கோபுரம்--அது
கூறுவதும் கம்பீரம்.
இந்தியாவின் வாசலாம்--அது
இந்த சென்ட்ரல் ஸ்டேசனாம்.

எக்குமோரு பாரு---அது
தெற்கில் வாழும் ஜோரு.
நிற்கவும் இடமில்லாமல்--செல்லும்
நீளும் ரயில் பயணம்.

ஆசியாவில் பெருசுதான்--அது
தேசியத்தின் புதுமைதான்.
கோயம்பேடு தாசுமகால்--இது
கூடும் பஸ்டாண்டுதான்.

சென்னையின்னா மெரினாதான்--தமிழ்
அன்னை மடி அங்கேதான்!
தமிழுயுரப் பிறந்தவர்கள்--அவள்
தாலாட்டில் ஆறுகிறார்.

வள்ளுவரின் கோட்டம்--கலை
வண்ணத்தமிழ் தோட்டம்.
சொல்லும் குறள் நோட்டம்--வகை
சொல்லிக் காட்டும் வாட்டம்.

இசை வளர்க்கும் மன்றஙகள்---இயல்
இசை நாடகங்கள்.
அசை போடும் ஊரென்றும்--தமிழ்
மிசையென்றால் மிகையாமோ!

பெருநகரப் பேர் வரிசை--இது
பெறும் நாலு பேரொன்றில்
பெருமையான பேரெல்லாம்--சீர்
பெற்றதெல்லாம் சென்னையே!

திராவிடத்தின் தலை நகராய் -அன்று
தேர்ந்திருந்த சென்னை.
தமிழுக்கே சொந்தமாய்--இன்று
தலை நிமிர்ந்து வாழுது.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (24-Aug-13, 7:25 am)
பார்வை : 122

மேலே