!!!===(((இருண்ட ஈழத்திற்கு உரிமை ஒளி அவசியம்)))===!!!
பாதையை தேடாதே உருவாக்கு - (லெனின்).
விடுதலை, சம உரிமை, வாழ்வு, மனிதநேயம், மக்கள், இவைகளை பிரதானமாகக் கொண்டே விடுதலைப்போர் தனது நகர்வை வரலாறாக மாற்றிக்கொண்டு இருக்கிறது, இந்த நகர்வானது பல இழப்புகளையும் பல யுகங்களையும் கடந்து ஆழமாக வேரூன்றி, செந்நீரும் கண்ணீரும் செறிந்து, வலிகளையும் வடுக்களையும் சுமந்து, அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் சக்தியோடு தனது எல்லையை நேக்கி நீளும் நெடியப் பயணமாகும், இந்தப் பயணமானது தன்னலம் கருதாத தியாகத்தின் உயிர் நரம்புகளால் அழுத்தமாக எழுதப்படும் சரித்திரமாகும்.
சுவர்க்கம், அமைதி, ஆனந்தம், நிறைவு, நித்திரை, பட்டம், பதவி, புகழ், இறுமாப்பு, ஏகாந்தம் இவைகளில் கரைந்து கொண்டிருக்கும் ஏகபோக வாழ்க்கை நகர்வுகள் உலக வரலாற்றுச் சரித்திரத்தில் என்றைக்குமே எதுவுமே எழுதப்படாத வெற்றுக்காகிதமாகவே கிடக்கும், ஆனால் இழப்பு ஏமாற்றம், வலி, அழிவு, அடிமை, ஏழ்மை, துயரம், அவமானம், எதிர்ப்பு இவைகளை அன்றாடம் அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் சக்தியின் ஆன்மக் கரங்களால் எழுதப்படுவதுதான் வரலாறாகிறது.
புலம்பி புலம்பி அழுது அழுது அலுத்துவிட்டது என்று எப்பொழுதும் கூறிவிட இயலாது, ஏனென்றால் ஈழத்தை நினைக்கும்பொழுதே மீண்டும் உயிர் நரம்புகள் வெடிக்கும் அல்லது கதறும்,
இறுதி கட்ட போர் எமக்களித்த பாடங்கள் பலவாரானது, இதில் உலக நாடுகள் குருடானதும் செவிடானதும் வேதனையானது,
இன்று ஈழ மக்களுக்கு சோற்றுக்கு வழியில்லை, மானத்தை மறைக்க ஆடையில்லை, தனது உறவுகளோடு தெருக்களில் சுதந்திரமாக பேச வழியில்லை, பிழைக்க வழியின்றி பெண்கள் கற்பை விற்கும் நிலையில் வறுமை சூழ்ந்து கிடக்கிறது, போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் காணாமல் போனவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாடில்லை, விசாரணையின்றி சிறையில் வாடுபவர்களை விடுவித்தப் பாடுமில்லை, மக்களின் மறு வாழ்விற்கான முகாந்திரங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை, வாய் திறந்து தமது உரிமையை கோருவதற்கான சுதந்திரமில்லை, இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்,
போராளிகளின் ஆட்சியில் அத்துமீறிய கற்பழிப்பு எங்கயாவது நடந்ததா? திருட்டு நடந்ததா? வாழ வழியின்றி கற்பை விற்கும் நிலை வந்ததா? அந்நியர்களிடம் அடிமைப்பட்டு வாழ வேண்டிய அவசியமிருந்ததா? மக்கள் அடைக்க்கலாமின்றி தெருவில கிடந்தார்களா? கலாச்சார சீரழிவுகள் நடந்ததா? தமிழனின் வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்பட்டதா? இப்படி பல கேள்விகளை கேட்டு இல்லவே இல்லை என்ற பதிலையும் நாமே உரைக்கலாம்.
புலிகளின் ஆட்சியில் மக்கள் கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும் தன்மானத்தோடு வாழ்ந்தார்கள் என்பது நெஞ்சில் நிறுத்த வேண்டிய விடயமாகும். அவர்களின் ஆட்சியில் மக்களின் உயர்வுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பலத் துறைகளை உருவாக்கி அதை செம்மையாக நடைமுறைப்படுத்தி வந்தார்கள்.
குறிப்பாக;
1.தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
2. தமிழீழ வைப்பகம்.
3. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
4.தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
5.சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
6. கிராமிய அபிவிருத்தி வங்கி.
7.அனைத்துலகச் செயலகம்.
8. நந்தவனம்
9. சுங்க வரித்துறை.
10.தமிழீழ மேம்பாட்டுக் கழகம்.
11. அரச அறிவியல் கல்லூரி.
12. வன வளத்துறை.
13. தமிழீழ நிதித்துறை.
14. தமிழீழ நீதி மன்றங்கள்
15. கலை பண்பாட்டுக்கழகம்.
16. மருத்துவப் பிரிவு.
17. திலீபன் சிறப்பு மருத்துவமனை.
18.பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
19. மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
20. சுகாதாரப் பிரிவு.
21.ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
22. போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
23.நிர்வாக சேவை.
24.அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
25. மீன்பிடி வளத்துறை.
26.விழிப்புக்குழு - மக்களுக்கான இரவுப் பாதுகாப்பு
27. தொழில் நுட்பக் கல்லூரி.
28. சூழல் நல்லாட்சி ஆணையம்.
29. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
30. தமிழீழ விளையாட்டுத்துறை.
31.தமிழீழ வானிலை அறிக்கை நிலையம்
32. தமிழீழ போக்குவரவுக் கழகம்.
33. மனிதவள செயலகம் மக்கள் சேவக பிரிவு.
34.வளங்கள் பகுதி.
35.மக்கள் தொடர்பகம்
36. விலங்கியல் பண்ணைகள்.
37. விவசாயத் திணைக்களம்.
38.தமிழ்மொழி காப்பகம்.
39. தமிழீழ சட்டக்கல்லூரி.
40. தமிழீழ கல்விக் கழகம்.
41. தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
42.காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
43.செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
44.செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
45. வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
46. அன்பு முதியோர் இல்லம்
47.இனிய வாழ்வு இல்லம்.
48. சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
49.நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
50.மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
51.சீர்திருத்தப் பள்ளி.
52. முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
53. உதயதாரகை (விதவைகளுக்கானது).
54. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
55. பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
56.எழுகை தையல் பயிற்சி மையம்.
57. மாணவர் அமைப்பு.
58.பொத்தகசாலை (அறிவு அமுது).
59. ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
60. நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
62.தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
63. விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
64. சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
65. ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
66.வெளிச்சம் (மாத சஞ்சிகை).
67. நாற்று (மாத சஞ்சிகை).
68. பொற்காலம் வண்ணக் கலையகம்.
69.அருச்சுனா புகைப்படக் கலையகம்.
70. ஒளிநிலா திரையரங்கு.
71. புலிகளின் குரல் வானொலி.
72.தமிழீழ வானொலி.
73.தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
76. பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
77. தமிழீழ இசைக்குழு.
78. காலணி (பாதணி உற்பத்தி மையம்)
79.சேரன் உற்பத்திப் பிரிவு.
80.சேரன் வாணிபம்.
81. சேரன் சுவையகம்.
82. சேரன் வெதுப்பகம்.
83.சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
84. பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
85. பாண்டியன் சுவையூற்று.
86. பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
87.சோழன் தயாரிப்புகள்.
88. பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
89. தென்றல் இலத்திரனியலகம்.
90. தமிழ்மதி நகை மாடம்.
91.தமிழ்நிலா நகை மாடம்.
92.தமிழரசி நகை மாடம்.
93. அந்திவானம் பதிப்பகம்.
94.இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.
95. இளவேனில் எரிபொருள் நிலையம்.
96. இளந்தென்றல் தங்ககம் (Lodge).
97. 1-9 தங்ககம் (Lodge)
98. மருதம் வாணிபம்.
99. மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).
100. மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).
101.கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.
102.மாவீரர் அரங்குகள்.
103. மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
104. மாவீரர் நினைவு வீதிகள்.
105.மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.
106.மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
107. மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.
108.மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
109.மாவீரர் நினைவு நூலகங்கள்.
110. மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
111.மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)
இப்படி நூற்றுக்கும் மேலான பல்துறைகளை கட்டி ஆண்ட புலிகள் மக்களாட்சியில், மக்கள் மான மரியாதையோடு வாழ்ந்தார்கள், புலிகள் உருவாக்கிய பலதுறைகளையும் சிங்களவ ராணுவம் இன்று தரைமட்டமாக்கி மக்களின் வாழ்க்கையையும் வளர்ச்சியையும் சிதைத்து அவர்களை கேள்விக்குறிகளில் தள்ளி விட்டது, சிங்கள இன வெறி அரசின் துரோகம் என்றும் மன்னிக்க இயலாததாகும், எப்பொழுதும் புலிகளை தீவரவாதிகளாகவே பார்த்து அவர்களின் மீது குற்றம் சுமத்திகொண்டே இருந்த நாடுகள் அவர்களின் அரசியல் வலிமையை பார்க்க மறந்துவிட்டார்கள் என்று ஒரு கோணத்தில் கூறினாலும், எந்த நாட்டிடமும் கையேந்தாமல் கடன்வாங்காமல் தனது சொந்த முயற்ச்சியில் சொந்த மக்களின் உதவியால் தன்னிச்சையாக இப்படி பலத்துறைகளையும் உருவாக்கி பல அறிவு ஜீவிகளை கொண்டு உலகம் வியக்கும் வண்ணம் ஆட்சி நடத்திய புலிகளின் வளர்ச்சி உலக நாடுகளை பொறாமைப்பட வைத்தது என்பதுதான் மறைமுகமான மறுக்க முடியாத மறு பக்கமும் ஆகும்.
இன்று தேர்தல் கோலம் பூண்டு இருக்கிறது ஈழம், இனி எத்தனை ஆட்சிகள் ஈழத்தை ஆண்டாலும் புலிகளை போல பலத்துறைகளையும் கட்டி எழுப்பி செம்மையான ஆட்சியை நடத்த முடியுமா என்றால், நிச்சயம் முடியாது என்று மட்டுமே எனக்கு கூறத்தோன்றுகிறது, ஏனென்றால் நல்ல அரசியல் தலைவர்கள் இன்று இருப்பதாக தெரியவில்லை, இருக்கும் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு மக்களை ஒரே சக்தியாக திரட்ட முயலாமல் தமது அரசியல் ஆதாயத்திற்காக அவர்களை மேலும் கூறுபோட்டுக் கொண்டு இருக்கிறார்கள், அதோடில்லாமல் சில குழப்பவாதிகள் குழம்பி தவித்துக் கொண்டிருக்கும் மக்களை தெளிவுறச் செய்வதற்குப் பதிலாக மேலும் மேலும் அவர்களை குழப்பத்தில் மூழ்கடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழர் ஆட்சியானாலும் சரி, சிங்கள ஆட்சியானாலும் சரி புலிகளுக்கு இணையான ஆட்சியை இனி காண்பதென்பது இலாத காரியம் என்றாலும் தமிழன் ஒன்றுபட்டால் மிகப்பெரிய மாற்றமும் சாதனையும் ஈழ மண்ணில் நிகழும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை என்றே அடித்து கூறலாம், ஏனென்றால் உலக நாடுகளின் பார்வை இன்று ஈழத்தின்மீது இருக்கிறது, இந்த நிலையில் நமது ஒற்றுமை ஒன்றே நமது உரிமையை தீர்மானிக்கும் என்பது மறுக்க முடியாத முக்கிய காரணியாக இருக்கிறது.
போராளிகள் தங்கள் சுயநலத்துகாக மக்களை பலி கொடுத்துவிட்டார்கள் என்று கொச்சையாக நினைப்பது, போராளிகளின் ஆத்மாவை அவமதிப்பதோடு உரிமைக்கோரும் விடுதலை உணர்வையும் சிதைக்கும் செயலே ஆகும்,
உலகில் உள்ள எந்த ஒரு இயக்கத்திலாவது லட்ச்சக்கணக்கான மக்கள் சக்தியோடு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறதா? கிட்டத்தட்ட 50 ஆயிரம் போராளிகளை கொண்டு இயங்கி இருக்கிறதா? பலத்துறைகளை கட்டி எழுப்பி தன்னாட்சி நடத்தி இருக்கிறதா? கப்பல்படை, விமானப்படை, தரைப்படை என்ற முப்படைகளையும் கொண்டு களமாடி இருக்கிறதா? என்று பார்த்தால் நிச்சயம் எந்த இயக்கமும் இருந்து இருக்காது, இந்தப்பெருமை தமிழனை மட்டுமே சாரும், இந்த விடுதலை வர்க்கத்தை தீவிரவாதிகளாக சித்தரித்தது இலங்கை அரசின் சதியே ஆகும்.
தமது சொந்தம் பந்தம் குடும்பம் அனைத்தையும் பலிபீடத்தில் இழந்தவர்கள்தான் போராளிகள், போரை சாதாரண சண்டையாக பார்த்தால் வலிக்கும் அதையே எமது இன விடுதலை உரிமையோடு ஒப்பிட்டு பார்த்தால் வலியோடு இன்னும் வீரமும் விடுதலை வெறியும் பிறக்கும், இதுதான் உண்மையான இன விடுதலை வீரனின் உண்மையான முகமாக இருக்கும் என்பதே நிதர்சன உண்மை.
எந்த தமிழனும் அடிமை வாழ்வை விரும்பமாட்டான், அப்படி விரும்புகிறவன் உண்மையான தமிழனாக இருக்க மாட்டான், உயிரைவிட மானமும் விடுதலையுமே பெரிது என்ற நிலைபாட்டில் வாழ்ந்தவன்தான் தமிழன்,
யாம் அழிந்தாலும் பின்னால் வரும் நமது சந்ததிகளுக்கு வழி காட்டிவிட்டே செல்வோம், நமக்கு பின்னால் வரும் சந்ததி உரிமையோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை பாரிய இழப்புகளை கண்டிருக்கிறோம், ஆனாலும் இந்த இழப்புகள் மீட்க முடியாதவைதான், இந்த இழப்பிற்கு சன்மானம் எதுவென்றால் உரிமையும், சுதந்திரமும், சுயமரியாதையும்தான் ஆனால் இவைகள் கிடைக்காத பட்ச்சத்தில் என்ன செய்ய? ஒரு இலங்கையில் தமிழனும் சிங்களவனும் நிம்மதியாக வாழ்வதென்பது உத்திரவாதமற்ற செயலாகும், ஒடுக்கப்பட்டவன் ஒடுங்கியே கிடக்கவும் மாட்டான், ஒடுக்கியவன் ஒடுக்கப்பட்டவர்களை நிம்மதியாக வாழவும் விடமாட்டான்.
இலங்கை அரசு தமிழ் மக்களையும், தமிழர் பகுதிகளையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து, ஒன்றுபட்ட சோல்பரி இலங்கை ஆட்சி என்ற பெயரில் மீண்டும்தமிழர் பகுதிகளை ஆள நினைக்கிறது, மீண்டும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி தனது அதிகாரத்தின்கீழ் கொண்டுவர சிங்கள பேரினவாத அரசு தொடர்ந்து முயன்று வந்தால் மீண்டும் அங்கே கிளர்ச்சி உருவாகும் வாய்ப்பிற்கு சிங்கள அரசே அடிகோலிவிடும் என்பதை உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் விடுதலை போர் என்பது அத்தனை சாதாரணமாக முடங்கிவிடும் என்ற சரித்திரம் எங்கேயும் இல்லை, ஆகையால் சிங்கள அரசு உலக நாடுகளின் ஆலோசனைப்படி தமிழ் மக்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கான உரிமையையும் அதிகாரப்பகிர்வையும் வழங்கி அவர்களை சுதந்திரமாக சுயமரியாதையோடு வாழ வைப்பதே சாலச் சிறந்த மனிதநேயமாகும்.
யுத்தம் நடந்த பூமியில் இனி யுத்தம் வராத ஒரு தீர்வு என்றால் அது அந்த மக்களுக்கான நிலையான உரிமையும் தனி ஈழமும்தான் என்பதை கண்ணைமூடிக்கொண்டு யோசிக்காமல் கூறலாம் ஆனால் உலக நாடுகளும் நம்மில் சிலரும் அதை பற்றி முரணான வன் சிந்தனையோடு இருப்பது வேதனையும் வெட்ககேடும் ஆகும்.
1956 ஆம் ஆண்டு செய்துகொண்ட பண்டா - செல்வா ஒப்பந்தமும், 1965 ஆம் ஆண்டு செய்யப்பட டட்லி ஒப்பந்தமும், 1960 க்கான ஸ்ரீ மாவோ திட்டமும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் தோல்வியையுமே தந்தது,
இதனால் 30 ஆண்டுகால ஒன்றுபட்ட தமிழர் அகிம்சை போராட்டம் இனி பயனளிக்காது என்ற முடிவுக்கு வரவைத்தது, இப்படி தமிழர்கள் ஏமாற்றப்பட்ட பிறகே தனி ஈழம் என்ற வட்டுக்கோட்டை தீர்மானம் தந்தை செல்வா தமையில் நிறைவேற்றப்பட்டது, அதுவே ஆயுதப்போராக உருவெடுத்தது, இதில் ஆயுத போராட்டத்தை குற்றம் என்று எவர் கூறினாலும் அது ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்காது, அப்படி முரண் உண்டெனில் 30 ஆண்டு கால அகிம்சை போராட்டம் முதலில் ஏன் தோல்வியை தழுவியது என்பதை காந்தியவாதிகள் நியாயப்படுத்தி ஆக வேண்டும்.
தனி ஈழம் என்பது வலுவான ஆயுதப்போராட்டத்தின் மூலம் கைகூடி வந்தது என்பது மிக மறுக்க முடியாத உண்மையாகும், அதற்கு ஒரு காரணமாகத்தான் ராஜீவ் காந்தியின் 13 வது சட்டத்தையும், நார்வே பேச்சுவார்த்தையையும் பார்க்க நேருகிறது, ஆனால் இந்த ஆயுத போராட்டம் தோல்வியை தழுவியது என்றால் அது பல வல்லாதிக்க நாடுகளின் சதியும், ஆயுதமும், அவர்கள் சிங்கள அரசுக்கு செய்த ராணுவ உதவியுமே ஆகும், இல்லையேல் ஈழம் இந்நேரம் மலர்ந்து மணம் பரப்பி கொண்டு இருந்து இருக்கும் என்றே கூறலாம்.
விடுதலை போராளிகளை தீவிரவாதிகளாக்கி, உலக நாடுகளின் உதவியோடு ஒரு சிறுபான்மை இனத்தின் விடுதலையை நசுக்கியதோடு லட்ச்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கான ஒரு நியாயமான நீதி விசாரனையைக்கூட இதுவரை தெளிவாகச்செய்ய உலக நீதி மன்றம் முன்வர யோசிப்பது தமிழ் மக்களின் வேதனையையே கிளருகிறது.
ஒரு சிறு இனத்தை அழிக்க கிட்டத்தட்ட முப்பது நாடுகளின் ராணுவ மற்றும் ஆயுத உதவிகள் இலங்கை அரசுக்கு தேவைப்பட்டது என்றால் அப்பொழுது தமிழனின் வீரம் எத்தகையது என்பதை நினைத்தால் நெஞ்சு பொங்குகிறது.
இப்படி இருக்க, இறுதி யுத்தத்தின்போது நடந்த போர் குற்றங்களும், இன அழிப்புச் செயலும், மனித உரிமை மீறலும் குறித்து பல ஆதாரங்கள் உலக நாடுகளின் பார்வைக்கு காட்டப்பட்ட நிலையிலும், இன்னும்கூட ஒரு சர்வதேச விசாரணையை மேற்கொள்ள முன்வராத உலக நீதிமன்றத்தின் செயல் நீதி செத்துபோய்விட்டது என்பதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.
அன்று ஐ நா நினைத்திருந்தால் போரை தடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களை காப்பாற்றி இருக்கலாம், ஆனால் இலங்கை அரசின் போலிப் பேச்சுக்களை கேட்டு தமிழ் மக்களை காப்பாற்ற தவறிவிட்டது ஐ நா என்றேத் தோன்றுகிறது,
போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், போர் குற்றங்களுக்கான மொத்த ஆதாரங்களும் சிங்கள அரசால் மூடி மறைக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் இப்பொழுது ஐ நா மனித உரிமை ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கையில் போர்நடந்த பகுதிகளை பார்வையிட்டு கொண்டு இருக்கிறார், இவரது அறிக்கையாவது தமிழ் மக்களின் வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும், குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும் முகாந்திரங்களும் இருந்தால் வரவேற்கத்தக்கதாகும்,
இந்த பார்வையிடலில் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், இலங்கை அரசின் போலி வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமல் தன்னிச்சையாக பாதிக்கப்பட்ட மக்களை அணுகி நல்ல நியாயமான தீர்வொன்றை ஐ நா மன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்பதே நமது நோக்கமும் எதிர்பார்ப்பும் ஆகும், இனி புலிகளை குற்றம் கூறிக்கொண்டு காலம் கழிப்பதை விட்டுவிட்டு அவர்கள் மீட்டெடுக்க நினைத்த மக்களின் வாழ்க்கைக்கான நிரந்தர தீர்வை உலக நாடுகளின் சம்மதத்தோடு மீட்டெடுக்க தொடர்ந்து பாதை அமைப்பதும், இன்று உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை தெளிவடையச் செய்ய வழிவகுப்பதுமே மிக அவசியமாகும்.
''பாதையை தேடாதே உருவாக்கு - (லெனின்)''
-----------------------------------(நிலாசூரியன்).

