மு ..........இல்லா ........மா ??

முந்திரி இல்லா பாயசம் ருசிக்குமா ?
முருங்கை இல்லா சாம்பார் மணக்குமா ?

முகவரி இல்லா மடல் சேருமா ?
முத்திரை இல்லா அஞ்சல் செல்லுமா ?

முக்கனி இல்லா விருந்து சுவைக்குமா ?
முத்தம் இல்லா உறவு தித்திக்குமா ?

முகில் இல்லா வானம் பொலிவாகுமா ?
முகப்பு இல்லா சேலை அழகாகுமா ?

முனிவர் இல்லா யாகம் நடக்குமா ?
முதியோர் இல்லா வீடு வீடாகுமா ?

முத்து இல்லா ஆரம் மிளிருமா ?
முற்றம் இல்லா இல்லம் எழிலாகுமா ?

முகவுரை இல்லா கட்டுரை தெளிவாகுமா ?
முழுமை இல்லா கவிதை அருமையாகுமா ?

முயல் இல்லா ஆமை முதல் வருமா ?முதுகெலும்பு இல்லா உயிரினம் நிமிருமா ?

முடிவு இல்லா சிறுகதை சுபமாகுமா ?
முன்னேற்றம் இல்லா தொழில் நிலைக்குமா ?

முல்லை இல்லா கதம்பம் மணக்குமா ?
முள் இல்லா ரோஜா இருக்குமா ?

முட்டை இல்லா பிரியாணி இறங்குமா ?
முறுக்கு இல்லா பண்டிகை சிறப்பாகுமா ?

முதலீடு இல்லா வாணிகம் நடக்குமா ?
முதிர்ச்சி இல்லா வளர்ச்சி மேன்மையாகுமா ?

முப்பால் இல்லா குறள் பெருமையாகுமா ?
முத்தமிழ் இல்லா சங்கம் அருமையாகுமா ?

முரசு இல்லா வெற்றி எழுச்சியாகுமா ?
முயற்சி இல்லா செயல் வாகைசூடுமா ?

முதல்வன் இல்லா காரியம் சித்தியாகுமா ?
முருகன் இல்லா சூரசம்ஹாரம் நடக்குமா ?

முழம் இல்லா பூச்சரம் அளக்கலாகுமா ?
முழி இல்லா காட்சி பார்க்கலாகுமா ?

முடிச்சு இல்லா கழுத்து மங்கலமாகுமா ?
முடிவு இல்லா எழுத்தால் கல்விழுமா .....????

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Aug-13, 12:11 am)
பார்வை : 121

மேலே