உயிர் போக மறுக்குது!(தாரகை)

மருமகள் பெண்ணுனக்கு
மனம் இருக்குதா?- என்
மகனுக்கும் தாயிருக்கா
நினைவிருக்குதா?

இடையிலே வந்த நீ என்னை
புரிந்து கொள்ளல - இந்த
மடச்சிக்கும் நயந்து நடக்க
அறிவு பத்தல

சுத்தமாக இருக்கச் சொல்லி
சொன்னது தப்பா? -அதை
குற்றமாக்கிக் குருவி கூட்டை
கலைத்தது சரியா?

குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய
சொன்னது தப்பா? - அதற்கு
எரிந்து விழுந்து குடும்ப விளக்கை
அணைத்தது சரியா?

பெற்றபிள்ளைப் போல தானே
உன்னைப் பார்த்தேன் - நீ
மற்ற விதமாய் நடத்தியதை
மறைக்கப் பார்த்தேனே

தங்க மட்டும் இடம் கொடுக்க
கெஞ்சி கேட்டேனே - ஆனால்
எங்கயாவது கொண்டு போய்
எறியச் சொன்னியே

தாரம் சொல்லை மந்திரமாய்
என் மகன் நினைத்ததால்- பெரும்
பாரமாக எனை எண்ணி
தூரம் வச்சுட்டான்

அங்கமெல்லாம் நோய் தின்று
மரணம் அழைக்குது - ஆனால்
உங்கள் முகம் பார்க்காமல்
உயிர் போக மறுக்குது

கிழவி ஆன போதும் நானுன்
கணவன் தாய் தானே? -உன்
குளவி கொட்டும் பேச்சுக்கெல்லாம்
பொறுமை காத்தேனே

கல்லான உன் இதயத்தை
கழற்றி வைத்திட்டு - ஒன்றும்
சொல்லாமல் ஒரு முறை
என் மகனை அனுப்பிடு

போகாத என் உயிர்
போய் தொலையட்டும் -அந்த
புண்ணியத்தை கட்டிக்கோ -மகன்
உனக்கும் இருக்கிறான்.

எழுதியவர் : தாரகை (28-Aug-13, 9:20 am)
பார்வை : 826

மேலே