ஒரு சோமாலியத் தாயின் ஏக்கம்

சோமாலியா
எம் தேசத்துக்கு
தகுந்த பெயர்தான்

ஏனனில் ....
சோகம் இங்கே தான்
மாரியாய்ப் பொழிகிறது .


எம் தேசத்து மொழி
வறுமைதான் .

எம் தேசிய கீதம்
சுருதி அருந்த வீணை போல
வார்த்தைகள் வரண்டுபோய்
வர மறுக்கும்
பசிக்குரல்கள் தான் .

கடவுளின்
கரிசனம் காணாமல் போயிற்றா?
அன்றேல் ...
கிரகப் பெயர்ச்சிக்கு
எம் தேசம் நகர்ந்திட்டா ?
எது எமைப் பீடித்தது என்று
சத்தியமாய் எமக்குத் தெரியாது .

எமது
ஆண்டாண்டு கால
கையிருப்புகள்
பசியும் ,பட்டினிச்சாவும்
மட்டும்தான்.

நாம்
பசியைத்தவிர வேறெதையும்
ருசித்ததில்லை .

பசிக்கும் போதும்
எதையுமே
ருசித்ததுமில்லை.

பல தேசங்களில்
திருப்தி காணா
துப்பாக்கி முனைகளுக்கு
இடப்படும் தீனிகூட
எம் தேசத்தில்
வரண்டுபோன வயிறுகளுக்கு
வாய்க்கரிசியாய் கூட
கிடைப்பதில்லையே!

தினமும்
மனிதம் நிரம்பிய பகுதிகளிலும்
இரண்டெழுத்து ,ஆறேழுத்து
சபைகளிலும்
எம் நிலைமை
எடுத்துரைக்கப் பட்டாலும்
வறுமையின் கொடுங்கோலாட்சி
ஒவ்வொரு தடவையும்
வெற்றிவாகை
சூடிக் கொள்கிறது

வறுமையின் வசிப்பிடம்
நாமாகவும்
எமது அவதாரம்
வறுமையாகவும் இருப்பதால்
பேரரசுகளுக்குக் கூட
எம் வறுமை பெயர்த்தெரிய
புலமையில்லையாம் !!

என் செல்ல மகளே !

நீ அழும் ஒவ்வொரு தடவையும்
என் இயலாமையை நினைத்து
அழுகிறேன் .

வறுமையை நினைத்து
வருந்துகிறேன் .-அப்போது
எதிலுமே தோற்காத தாய்ப்பாசம்
வறுமையிடம் தோற்று
வெட்கித் தலை குனிகிறது

மகனே !!!

நீ பசித்தழும் நொடியெல்லம்
வற்றிப்போன என்
மார்புக் காம்புகளில்
துளிஈரம் பிறப்பதாய்
உணர்ந்தாலும் ...,அதுவே
என் கடைசி உயிர்த்துளி கண்டு
கலங்குகிறேன் மகனே !!!

வசிக்க வேற்றுக் கிரகத்தில்
வளம் தேடும் மனிதர்க்கு
பசியால் துடித்திடும்
எம் தேசத்து மக்களின்
உடற் கூட்டிலிருந்து
உயிர் பறவை
சிறை துறக்க முயற்சிப்பது
புலப்படவில்லையே மகனே !!

கன்னங்களில் காய்ந்து போன
கண்ணீரின் கோடுகளை
கொஞ்சம் எச்சில் கொண்டாவது
துடைத்துக் கொள்வோம் மகனே !

மனிதம் மரித்துப் போகாதவரை
எம் கிழக்கும் ஒரு நாள்
புதுப்பொலிவோடு பிறக்கும்
அதுவரையில்
பொருத்திடுவோம் மகனே!

எழுதியவர் : ஹபீலா ஜலீல் (28-Aug-13, 2:51 pm)
பார்வை : 74

மேலே