" என் வீட்டு ஜன்னலில் "

புலரும் காலை வேளையில்,
சீருடை அணிந்த செந்தாமரைகள்.
என் வீட்டு ஜன்னலில்,
எதிரே உள்ள தொடக்கப்பள்ளி.

பளபளக்கும் வெண் சட்டையும்
படியவாரிய தலையும், காலையில்.
புழுதி சேர்ந்து கலைந்திருக்கும்,
அதிலுமோர் அழகிருக்கும், மாலையில்.

காரிலும் வருவார்,
காலிலும் வருவார், காலையில்.
கைகோர்த்தே திரும்புவார்
கட்டியணைத்தே பிரிவார், மாலையில்.

கடலுமில்லை, சிப்பியுமில்லை,
கொத்துக்கொத்தாய் சிரித்திடும்
முத்துக்கள்.
என் வீட்டு ஜன்னலில்,
எதிரே உள்ள தொடக்கப்பள்ளி.

எப்போதும் சிரிப்பு சத்தம்,
இடையிடையே அழுகை சத்தம்,
இரண்டுமே இனிப்பு முத்தம்,
அனுபவிப்பேன் நித்தம் நித்தம்.

ஐந்தாம் வகுப்பு சண்டையெல்லாம்,
ஐஸ் வண்டியிலே சமாதானம்.
அள்ளித் தின்னும் பிள்ளை முகம்,
ஆண்டவனின் சந்நிதானம்.

தேனூறும் நந்தவனத்தில்,
திரண்டு வரும் தென்றல் காற்று.
என் வீட்டு ஜன்னலில்,
எதிரே உள்ள தொடக்கப்பள்ளி.

வீடுசெல்லும் மணி ஒலிக்காக,
வீட்டிலிருக்கும் என்மனம் ஏங்கும்.
விடுமுறை நாட்களில் மட்டும்தான்,
ஜன்னல்கதவும் வேலை பார்க்கும்.

வெண்ணை தின்னும் கண்ணன் ஒன்று,
வெள்ளை ஆடை கர்த்தர் ஒன்று,
குல்லாவோடு நபிகள் ஒன்று,
கைகூடிச் சிரித்ததில் மகிழ்ந்தேன் அன்று.

மூன்று மணி மதியத்தில்,
முந்நூறு நிலவுகள் உதயம்.
என் வீட்டு ஜன்னலில்,
எதிரே உள்ள தொடக்கப்பள்ளி.

அம்மாவின் அன்புக் கைகளிலிருந்து,
விலக மறுக்கும் ஒரு பிள்ளை,
அப்பாவின் தோள்த் தலையணையிலிருந்து,
விழிக்க மறுக்கும் ஒரு பிள்ளை,
குட்டித் தங்கை பையையும் சேர்த்து,
தூக்கிச் செல்லும் ஒரு பிள்ளை,
கூடவே வரும் நண்பன் தோளில்,
கைபோட்டுச் செல்லும் ஒரு பிள்ளை.
பச்சை தொலைத்த கறுப்புச் சாலையில் தான்,
எத்தனை முல்லை!!, எத்தனை முல்லை!!!

நிம்மதி தொலைத்த இம்மை உலகில்,
இன்பம் சுரக்கும் பன்னீர் பூக்கள்.
என் வீட்டு ஜன்னலில்,
எதிரே உள்ள தொடக்கப்பள்ளி.

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (30-Aug-13, 8:05 pm)
பார்வை : 99

மேலே