திசை மாறுமோ (தொடர்) 2

2. ஊரின் புறத்தே!

ஓங்கிய கோபுரம் உச்சிப் பொன்முடி
உதயத் தொளிவெள்ளம்
தாங்கியே மின்னும் தகதக ஒளியின்
தன்மையை விழிநோக்கி
ஏங்கிய மனதோ டிளவய துடையோன்
இறையவள் தனை வேண்டி
தேங்கிய துயரும் திரையிடும் விழிகொள்
துளியொடு நுழைகின்றான்

வீரத்தின் தாயே வெற்றியின் அன்னை
விழிகளைத் திறவாயோ
ஈரமுன் மனதுள் இருப்பதை அறிவேன்
எமைக்காத் தருளாயோ
வேரறுத் தெம்மை வீழ்த்திட வருவோர்
விதியெனக் கருதாமல்
ஊருடன் ஒன்றி ஒரணி சேர்ந்தே
உயர்வுற வழிகாண்போம்

நாம்வழி தவறி நடந்திடும் பாதை
நாற்திசை பிரியாமல்
தீம்புகழ் தமிழின் திருமகன் நொந்து
தெருவினில் அழியாது
வேம்பதன் சுவையாய் வெறுப்பினிலான
வீணர்களால் பிணமாய்
பூம்புனல் வாழும் மீனது வலையில்
பிடிபடும் வாழ்வேனோ

கூப்பிய கரங்கள் குவிந்தன மனதுள்
கொடிதோன் றெழில்மலராய்
நாப்பிழை யாது நற்றமிழ் பாடி
நினதடி பூசித்தேன்
ஆப்பினை இழுத்தே வாலினைபோடும்
அதிமதி ஊறுகளை!
தோப்பெனக் கூடத் துளிமழை கடலாய்
தோன்றவும் அருள்வாயோ
(தொடரும்)

எழுதியவர் : கிரிகாசன் (2-Sep-13, 4:40 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 46

மேலே