கவிதை - கே.எஸ்.கலை
உள்ள மரத்தின்
நல்ல விதைகள் !
சொல்லத் தெரிந்தால்
அவைதான் கவிதைகள் !
நரம்புப் பீறிடும் -
உணர்வுக் குமுறல்கள்...
வரம்பு மீறிடும் -
வார்த்தைச் சிதறல்கள் !
உணர்ச்சித் துடித்து -
உள்ளமும் உண்மையும்,
புணர்ச்சி முடித்தால் -
வெள்ளமும் வெல்லமும் !
விழிகள் திறந்திட
வாதைகள் புதைத்திடும் !
மொழிகள் சிறந்திட
பாதைகள் விதைத்திடும் !
இலக்கண இலக்கியம் -
உறவினில் பிறந்திடும்...
இது-சிக்கன இலேகியம் -
பிணிகளும் பறந்திடும் !
பிழையறச் செய்தால்
மனங்கள் பண்படும் !
குறையுறச் செய்தால்
உளங்கள் புண்படும் !
-----------------------------
அகத்தின் பக்தி
கற்பனைக் கடப்பது !
யுகத்தின் புத்தி
விற்பனை நடப்பது !
சில்லறைப் போதை -
தரத்தினை நுகர்ந்திடும்...
கல்லறைப் பாதை -
இலக்கியம் நகர்ந்திடும் !
பிளாஸ்டிக் தாரகை -
பினாத்தலில் உயர்ந்திடும்...
பிளாட்டினப் பேரிகை -
புழுதியில் அயர்ந்திடும் !
-----------------------------
விதைகள் புதைந்தால்
மரங்கள் பெருகும் !
கவிதைகள் சிதைந்தால்
வரங்கள் கருகும் !
தரம்தான் நிரந்தரம்
என்றே நினைப்போம் !
சுரம்தான் நிலவரம்
என்பதைத் தவிர்ப்போம் !
(சுரம் = பாலை)
-----------------------------