ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

வாசனை திரவியம் பூசியதில்லை
வாரி தலைமூடி சீவியதில்லை
மேல்தட்டு வர்க்கமென்று காட்டிக்கொள்ள
மேடைதனிலென்றும் ஆங்கிலம் பேசியதில்லை
பல்லாயிரமாண்டுகளாக ஆழ்கடலுக்குள்
அமைதி கொலுவிருக்கும்
குமரி கண்டத்தின் குடிமகனாக
மார்தட்டி கொள்ளும்
என் பள்ளி தமிழையனுக்கு.....

காக்கி சட்டைகள் குவிந்தாலும்
ராணுவம் வந்து நுழைந்தாலும்
குண்டுகள் நெஞ்சை பிழந்தாலும்
இடியே தலையில் விழுந்தாலும்
புரட்சி என்பதென்ன ?
போராட்டம் என்பதென்ன என்று
இந்த பூமிக்கு புரியவைத்த
இடிந்தகரை மக்களுக்கு......

ஒருபக்கம் இந்துத்துவ எச்சரிப்பு
மறுபக்கம் தீவிரவாத சித்தரிப்பு
குல்லா தாடி என்பதனால்
எல்லா திசையிலும் அடக்குமுறை.....
இருந்தும் என்னை சகோதரனாய்
அனைத்து கொள்ளும்
இசுலாமிய தோழர்களுக்கு....

பாலினம் ஈர்க்கும் ஆபாசம்
பல்கி பெருகிய கேளிக்கை
கொட்டிகிடக்கும் இணையதளம்
என்றபோதும்
சமூகமாற்றம் நிகழ்த்தும்
அளப்பரிய கருவியாக
அதை கையாளும் ஒரு சில
இளைய தலைமுறைக்கு...

இப்படியாக
படிப்படியாக
நான் கடந்து போகிற
ஒவ்வொரு நொடியிலும்
வாழ்க்கை குறித்த
வகுப்பை எனக்கு
எடுத்து கொண்டிருக்கும்
எல்லோருக்கும்
இந்த மாணவனின்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.


-----தமிழ்தாசன்-----
05.09.2013

எழுதியவர் : தமிழ்தாசன் (5-Sep-13, 12:32 pm)
பார்வை : 238

மேலே