திசைச்சொல்
சொல் > இலக்கிய வகைச் சொற்கள் > திசைச்சொல்
தமிழ்நாட்டுக்கு அப்பால் உள்ள பிற பகுதிகளில் பேசப்படும் மொழிகளிலிருந்து வந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்
(எ.கா) ஆசாமி, சாவி
இவற்றில் ஆசாமி என்னும் சொல் உருதுமொழிச் சொல். சாவி என்னும் சொல் போர்த்துக்கீசிய மொழியில் உள்ள சொல். இச்சொற்கள் தமிழ்மொழியில் கலந்து வருகின்றன. இவ்வாறு தமிழ்நாட்டுக்கு நான்கு திசைகளிலும் உள்ள பகுதிகளிலிருந்து தமிழ் மொழியில் வழங்கும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.
செந்தமிழ் நிலத்துடன் சேர்ந்த பன்னிரு நாடுகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்களும் திசைச் சொற்கள் எனப்படும்.
பெற்றம் - பசு - தென்பாண்டி நாட்டுச்சொல்
தள்ளை - தாய் - குட்ட நாட்டுச்சொல்
அச்சன் -தந்தை - குடநாட்டுச்சொல்
பாழி -சிறுகுளம்- பூழிநாட்டுச்சொல்
இவை போன்றவை செந்தமிழ்நிலத்துடன் சேர்ந்த நாடுகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் ஆகும்.
சில திசைச் சொற்களின் பட்டியலையும் அவற்றின் நாடுகளையும் காண்போம்.
திசைச்சொல் மொழி தமிழ்
கெட்டி - தெலுங்கு - உறுதி
தெம்பு - தெலுங்கு - ஊக்கம்
பண்டிகை - தெலுங்கு - விழா
வாடகை - தெலுங்கு - குடிக்கூலி
எச்சரிக்கை - தெலுங்கு - முன் அறிவிப்பு
அசல் - உருது - முதல்
அனாமத்து - உருது - கணக்கில் இல்லாதது
இனாம் - உருது - நன்கொடை
இலாகா - உருது - துறை
சலாம் - உருது - வணக்கம்
சாமான் - உருது - பொருள்
சவால் - உருது - அறைகூவல்
கம்மி - பாரசீகம் - குறைவு
கிஸ்தி - பாரசீகம் - வரி
குஸ்தி - பாரசீகம் - குத்துச்சண்டை
சரகம் - பாரசீகம் - எல்லை
சுமார் - பாரசீகம் - ஏறக்குறைய
தயார் - பாரசீகம் - ஆயத்தம்
பட்டா - பாரசீகம் - உரிமம்
டாக்டர் - ஆங்கிலம் - மருத்துவர்
நைட் - ஆங்கிலம் - இரவு
பஸ் - ஆங்கிலம் - பேருந்து
"செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்
தம் குறிப்பினவே திசைச் சொல் என்ப" - (நன்னூல் : 273)
செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு பகுதிகளிலிருந்தும் பதினெட்டு மொழி பேசும் நாடுகளில் தமி்ழ்மொழி பேசும் பகுதி அல்லாத பிற பதினேழு நிலங்களில் உள்ள மொழிகளிலிருந்தும் தமிழ் மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் என்பது இந்த நூற்பாவின் பொருள்.
பன்னிரண்டு நிலங்கள் (நாடுகள்)
1) தென்பாண்டி நாடு
2) குட்ட நாடு
3) குட நாடு
4) கற்கா நாடு
5) வேணாடு
6) பூழி நாடு
7) பன்றி நாடு
8) அருவா நாடு
9) அருவா வடதலை நாடு
10) சீதநாடு
11) மலாடு
12) புனல் நாடு
என்பவை பன்னிரண்டு நாடுகள் ஆகும்.
பதினெட்டு மொழி வழங்கும் நாடுகளில் தமிழ் தவிர்த்து ஏனைய பதினேழு நாடுகள்.
1) சிங்களம்
2) சோனகம்
3) சாவகம்
4) சீனம்
5) துளு
6) குடகம்
7) கொங்கணம்
8) கன்னடம்
9) கொல்லம்
10) தெலுங்கம்
11) கலிங்கம்
12) வங்கம்
13) கங்கம்
14) மகதம்
15) கடாரம்
16) கௌடம்
17) குசலம்
என்பவை பதினேழு மொழிகள் பேசப்படும் நாடுகள் ஆகும்