எறும்பு தின்றால் கண் தெரியும்

எறும்புகள் - மிக சிறிய அற்ப பிராணிகள்
எறும்பும் தன் கைகளால் எண் சாண் என்கிறாள் ஔவை. இனிப்பு என்றால் குழந்தையும் எறும்பும்.
அவை வாசனையால்தான் இனத்தையும் உணவையும் கண்டுகொள்கின்றன.

யானையை பார்த்து வியப்படைவர்களில் ஒருவர் கூட எறும்பைப் பார்த்து வியப்படைவது கிடையாது.

அது சரி புற்றில் வாழ்கின்ற இந்த எறும்புகளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு ?
"எறும்பு தின்றால் கண் தெரியும்"
என்கிறார்களே ஏன் ?

சாதரணமாக நம் வீடுகளில் தேனீர் , பால் , இனிப்புகளில் எறும்பு இருந்தால் , நாம் அம்மாவிடம் அல்லது வீட்டில் பெரியவர்களிடம் முறையிட்டுருப்போம் , அப்போது அவர்கள் வேடிக்கையாகவும் ,சோம்பேறித்தனமாகவும் "எறும்பு தின்றால் கண் தெரியும்" குடி / சாப்பிடு என்பார்கள்.

இதை விளக்க ஒரு பழைய பாடலும் கதையும் உள்ளது.

ஓர் ஊரில் மிகவும் வறுமைப்பட்ட பிச்சைகாரன் ஒருவன் இருந்தான். அந்த ஊரில் அவனால் திருப்பதியாக வாழ முடியவில்லை என்றாலும் இறைவனை வேண்டியபடி தன வாழ்நாளை கடத்தி வந்தான். அவனது அயலில் வாழ்ந்த ஒருவர் வெளியூர் சென்று சில காலம் கழித்து ஊர் திரும்பினார். முன்பு வறுமையில் வாடிய பிச்சைக்காரன் பணக்காரனாக மாறியிருப்பது கண்டு அதிசயித்தார். எப்படி இவனுக்கு இவ்வளவு செல்வம் வந்தது என்று வியப்படைந்தார். அவனிடமே கேட்டும் விட்டார். அதற்கு அப்புது பணக்காரன் பாடல் ஒன்றின் மூலம் பதில் கூறினான் .

"கட்டத்துணியற்று காந்த பசிக்கு அன்னமிட்டு
எட்டி மரம் ஒத்திருந்த யான்
எறும்புக்கு நொய்யரிசி இட்டேன் - அதனால்
சிறிது பொருள் ஈந்தான் ஈசன்

அப்பொருள் கொண்டு அடியவர்க்கு அன்னமிட்டேன்
ஒப்புவமை இல்லான் உள முவந்தே இப்பார்
அழகேசன் என்றே அதிக செல்வம்
அளவிலாது ஈந்தான் அவன் "

சிறு எறும்புகள் உண்பதற்கு உணவிட்டமையால் ஈசன் கண் திறந்து தெரிந்து இறங்கினார். இதையே பெரியோர்கள் இவ்வாறு
"எறும்பு தின்றால் கண் தெரியும்" என்று சுருங்க சொல்லியிருக்கிறார்கள்.

ஹாவர்டு பாஸ்ட் என்றொரு அமெரிக்க எழுத்தாளர் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அந்த கதையில் பூங்கா ஒன்றில் ஒரு நாள் எறும்புகள் திடீரென உடல் பருமனாகி முயல் அளவு வளர்ந்துவிடும். கண்ணில் படும் மனிதர்கள் அத்தனை பேரும் உடனே எறும்புகளை தடியால் அடித்து கொல்ல துவங்குவார்கள்.

ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று ஒரு மருத்துவர் ஒவ்வொரு மனிதனாக தேடி சென்று விசாரணை செய்வார். எறும்பு மிகப் பெரியதாக இருக்கிறது அதனால் தான் என்று பலரும் சொல்வார்கள். யாரையாவது அது கடித்ததா? இல்லை ஏதாவது கெடுதல் செய்தததா என்று மருத்துவர் கேட்டவுடன், அதெல்லாமில்லை ஆனால் எறும்பு எறும்பாக தானே இருக்க வேண்டும் என்று ஆட்சேபணை செய்வார்கள்.

உடனே மருத்துவர் சொல்வார் மனிதர்கள் மட்டும் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் ஆனால் காலம் காலமாக எறும்புகள் எறும்புகளாகவும் யானைகள் யானைகளாகவுமே இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயமிருக்கிறது. வளர்ச்சியும் மாற்றமும் மனிதர்களுக்கு மட்டுமேயானதில்லை என்பார்.

கற்பனையான கதை என்ற போதும் கதையின் அடிநாதமாக மனிதர்கள் எப்போதுமே கற்பனையான பயத்திலும், உலகம் தனக்கு மட்டுமேயானது என்று அகந்தையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படுகிறது.

------------------------------------------------------------------------
சித்தனூரில் இனிப்பு கடை ஒன்று இருந்தது. சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைக் கண்டால் பிடிக்காது. அவர்கள் மீது எரிந்து விழுவான். அவர்களால் ஏதேனும் வேலை ஆக வேண்டி இருந்தால் அவர்களை அழைப்பான்.

"இந்த வேலையை முடியுங்கள்; இனிப்பு தருகிறேன்" என்பான். அவர்கள் அதைச் செய்து முடித்ததும் இனிப்பு தர மாட்டான். மாறாக, அவர்களை விரட்டி விடுவான். இதனால், சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது. நண்பகல் நேரத்தில், கடைக்குள் படுத்துத் தூங்குவான். சிறுவனாக இருந்த அவன் மகன், அப்போதுதான் கடையைப் பார்த்துக் கொள்வான்.

"ஒருமுறை அந்தக் கடைக்காரன் மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்றான். பலகாரங்கள் வைப்பதற்காக வாய் அகன்ற பானைகள் முப்பது செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள்?'' என்று கேட்டான்.

ஒரு வாரத்தில் தயாராகி விடும்'' என்றனர்.

குறிப்பிட்ட நாள் வந்தது. அந்தப் பானைகளைக் கடைக்குள் எடுத்து வர வேண்டுமே... என்ன செய்வது என்று சிந்தித்தான் கடைக்காரன். வழக்கம் போலச் சிறுவர்களை ஏமாற்றுவோம் என்று நினைத்தான்.

சிறுவர்களை அழைத்த அவன், "மண்பாண்டம் செய்பவர்களிடம் முப்பது பானைகள் உள்ளன. அவற்றைக் கவனமாக எடுத்து வர வேண்டும். எடுத்து வருகிறீர்களா?'' என்று கேட்டான்.

"அப்படி நாங்கள் எடுத்து வந்தால் எல்லாருக்கும் நிறைய இனிப்பு தருவீர்களா?'' என்று கேட்டான் அவர்களில் ஒருவன்.

"கொண்டு வாருங்கள். பிறகு பார்க்கலாம்'' என்றான் கடைக்காரன்.

நிறைய இனிப்பு கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் சிறுவர்கள்.

ஒவ்வொரு பானையாக அவர்கள் கடைக்குக் கொண்டு வந்தனர். எல்லாப் பானைகளும் வந்து சேர்ந்தன.

"எங்களுக்குத் தருவதாகச் சொன்ன இனிப்பைத் தாருங்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே செல்கிறோம்'' என்றனர் சிறுவர்கள்.

"நான் எப்போது உங்களுக்கு இனிப்பு தருவதாகச் சொன்னேன். நீங்கள் கேட்டதற்கு, கொண்டு வாருங்கள் பிறகு பார்க்கலாம் என்றுதானே சொன்னேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன். பிறகு பார்க்கலாம்'' என்று அவர்களை விரட்டினான் கடைக்காரன்.

தாங்கள் ஏமாந்து விட்டதை எண்ணிப் புலம்பியப்படியே அங்கிருந்து சென்றனர் சிறுவர்கள்.

அந்த வழியாக வந்த கோபால், "ஏன் அழுது கொண்டே செல்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

கோபால் மாமா! "அந்த இனிப்புக் கடைக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார்'' என்று நடந்ததை எல்லாம் சிறுவர்கள் கூறினர்.

"கவலை வேண்டாம்! உங்களுக்குக் கிடைக்க வேண்டிய இனிப்பிற்கு அதிகமாகவே கொண்டு வருகிறேன். நீங்கள் யாரும் அந்தக் கடைக்குள் வரக் கூடாது. வெளியே நில்லுங்கள்'' என்ற கோபால் கடைக்குள் நுழைந்தார்.

அப்போது கடைக்காரனின் மகன்தான் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த அறைக்குள் கடைக்காரன் தூங்கிக் கொண்டிருந்தான்.


இவனை எளிதாக ஏமாற்றலாம் என்று நினைத்த கோபால், இனிப்புப் பாத்திரத்திற்குள் கையை விட்டான். இனிப்புகளை எடுத்துச் சாப்பிட்டான். இதைப் பார்த்த சிறுவன், "என்ன இனிப்பை எடுத்து சாப்பிடுகிறாய்? பணம் தராமல் எதையும் தொடக்கூடாது'' என்று கத்தினான்.


தம்பி! "உன் தந்தைக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் இப்படி இனிப்பை சாப்பிடுவதை அவர் பொருட்படுத்தமாட்டார். என் பெயர் எறும்பு. நீ வேண்டுமானால் அவரிடம் இனிப்பை நான் சாப்பிடுவதாகச் சொல். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார்'' என்றான் கோபால்.

அப்பா! "கடைக்குள் எறும்பு வந்துள்ளது. நான் சொல்லியும் கேளாமல் இனிப்பை எடுத்துச் சாப்பிடுகிறது'' என்று கத்தினான் சிறுவன்.

தூக்கம் கலைந்ததால், எரிச்சல் அடைந்த கடைக்காரன், மகனே! "எறும்பு வந்தால் விரட்டு... இல்லையேல் அதை அப்படியே விட்டுவிடு. எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா?'' என்று கத்தினான்.

இதைக் கேட்ட கோபால் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். "இனிப்பு நிறைந்திருந்த ஒரு பாத்திரத்தைத் தூக்கினான். சிறுவர் களுக்கு வழங்க இதுபோதும்" என்று நினைத்து அங்கிருந்து புறப்பட்டான்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவன், அப்பா! "நிறைய இனிப்புகளை எறும்பு எடுத்துச் செல்கிறது. பணம் ஏதும் தர வில்லை'' என்று கத்தினான்.

இதைக் கேட்ட கடைக்காரன் கோபம் கொண்டான்.

என் தூக்கத்தைக் கெடுக்காதே என்று எத்தனை முறை சொல்வது? நான் எழுந்து வந்தால் உன் தோலை உரித்து விடுவேன். "எறும்பு இனிப்பை எடுத்துச் செல்வதற்காக, யாராவது கவலைப்படுவார்களா? போனால் போகட்டும் எவ்வளவு இனிப்பை எடுத்துச் சென்றுவிடப் போகிறது. பேசாமல் இரு'' என்று கத்தினான்.

இனிப்புப் பாத்திரத்துடன் வெளியே வந்தான் கோபால். அங்கிருந்த சிறுவர்களுக்கு ஒன்றுக்கு இரண்டாக இனிப்புகளைத் தந்தான். அவர்களும் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர்.
"உங்களை ஏமாற்ற முயன்ற கடைக்காரனை நன்றாக ஏமாற்றி விட்டேன்'' என்ற கோபால் அங்கிருந்து புறப்பட்டான்.

தூக்கம் கலைந்து எழுந்த கிழவன், விஷயம் அறிந்ததும் குய்யோ, முய்யோ என கத்தினான். யார் அந்த எறும்பு என்று தெரியாமல் நொந்து போனான்.
_______________________________________
தமிழ் இணையம் சிலவற்றை தேடி தேடி படித்து பதித்தது.
ஆறுகால் அதிசயம் - எறும்புகள்
எறும்பு குழுவாக வாழும் அறுகால்கள் கொண்ட ஒரு பூச்சியினமாகும். இவை வியப்பூட்டும் வகையில் குழு அல்லது சமூக ஒழுக்கம் கொண்ட வாழ்வைக் கொண்டுள்ளன.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன. இது நுட்பமானதும் மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது.
மனிதன் தன்னை நோய்கிருமிகளிலிருந்து தடுத்துக் கொள்வதைப்போல மற்றஉயிரினங்களும் தங்களை தற்காத்துக் கொள்ள சில தடுப்பு முறைகளைக் கையாளுகின்றன. அந்த வகையில் எறும்புகள் நோய்கிருமிகளை தடுக்க ஒரு வகை திராவகம் போன்ற திரவப் பொருளை உற்பத்திச் செய்கின்றன. இந்த திரவப் பொருளை தங்களின் உடலில் பரவச் செய்வதுடன் தங்களின் கூடுகளின் சுவர்களிலும் தடவுகின்றன. எறும்புகள் தங்களின் உடலை மட்டுமல்ல,தங்களது வசிப்பிடத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கின்றன.
மனிதர்களைப் போன்றே எறும்புகள் இறந்த உடலகளை மண்ணில் புதைத்து விடுகின்றன.

உலகின் எல்லாப் பகுதிகளிலும் எறும்புகள் காணப்பட்டாலும், இவற்றில் பெரும்பாலானவை வெப்ப வலயங்களிலேயே வாழ்கின்றன. எறும்பிலுள்ள இனங்களின் எண்ணிக்கை, உயர் எல்லையாக, கிட்டத்தட்ட 22,000 இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது.எண்ணிக்கையில் இனங்களை உள்ளடக்கி இருப்பதனால், எறும்புகள் உலகின் விரிவாக உயிர்வாழ்வதில் வெற்றி நாட்டிய உயிரினமாகவும் கருதப்படுகிறது. எறும்புகளின் மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் குமுக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாக கருதப்படுகின்றன. பொதுவாக எறும்புகளைக் காண முடியாத இடம் தென் பனிமுனைப் பகுதியாகும். எறும்புகள் ஏறத்தாழ 110 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தனி வகையான உயிரினமாக உருப்பெற்றன எனக் கருதுகின்றார்கள். நிலவுலகில் பூக்கும் நிலைத்திணை(தாவரம்) தோன்றிப் பரவிய பின்னரே (100-140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) எறும்புகள் பல்வேறு உள்ளினங்களாக வளர்ச்சி பெற்றன.

எறும்பு பற்றிய கற்றல் எறும்பியல்(ஆராட்சி) myrmecology என அழைக்கப்படுகின்றது.
எறும்புகள் தமது உடல் எடையை விடவும் 50 மடங்கு சுமையினை சுமக்க வல்லன.
சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள்வரை உயிர்வாழும். ( பிரத்தானிய ஆய்வுப்படி கறுப்பு பெண் எறும்பு சுமார் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என அறியப்பட்டது.)
எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உண்டு. ஒன்று அவைக்காகவும் மற்றையது ஏனைய எறும்புகளுக்ககவும்!
எறும்பு கூட்டத்தில தொலைஞ்சு போன எறும்பு , ஆறு மாசம் கழிச்சு தன்னோட கூட்டத்தில வந்து சேர்ந்தாலும் , மற்ற எறும்புகள் எல்லாம் அடையாளம் கண்டு கொள்ளும். தலையில் முட்டி, முட்டி வாழ்த்து சொல்லுமே, கவனித்திருக்கிறீர்களா ..!

எறும்புகளின் நீளம்,உயரம்,பருமன்,எடை இவைகளை கருத்தில் கொண்டு,அவைகள் பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டு மனித ஆற்றலோடு ஒப்பிடும்; போது அதே பாலைவனத்தில் 35 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரு மனிதன் பயணிப்பதற்கு சமமாகும். மனிதனால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத இந்த அற்புதச் செயலை சாதாரண எறும்புகள் வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனவே! இது எப்படி ? என சிந்திதாலே தலை சுற்றுகிறது.

மூன்று மதங்களிலும் எறும்பு பற்றி சொல்லபட்டிருக்கிறது
6:6-11 சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்: அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்: (புனித வேதகாமத்தில்)


அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன் ‘எறும்புகள் பேசியதாகவும்,அது கேட்டு பறவைகள், உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர் சுலைமான்(அலை) அவர்கள் சிரித்ததாகவும்’ இங்கே கூறப்படுகிறது.

அல்லாஹ் தனது படைப்புகளில் அற்பமான எறும்புகள்; பேசியதையும், அதற்கொரு முக்கியத்துவம் அளித்தும் தனது வேதத்திருமறை யில் குறிப்பிடுவதாயின் அந்த அரிய படைப்பில் நிச்சயம் பல அதிசயங்கள் அமைந்திருக்கும்.

இந்து மதத்தில் ஈசன் படி அளந்த கதையுண்டு

இந்த மூவறிவு எறும்பு தன் மோப்ப சக்தியை இழந்தால் இறந்துவிடும்.

எழுதியவர் : ANBARASAN (9-Sep-13, 2:00 am)
பார்வை : 944

மேலே