மலர்போல் அணைப்பாள் மகிழ்ந்து !

உயிர்வலி ஏற்று உயிரைக் கொடுத்த
உயர்தாய்க் கிணையாய் எவராம்? - துயரங்கள்
எல்லாம் துடைப்பான் எனதுமகன் என்றே
மலர்போல் அணைப்பாள் மகிழ்ந்து !

அம்மா வெனஅவன் அன்பாய் அழைத்திட
அம்மாவின் இன்பம் அளவில்லை - எம்பியவன்
காலெடுத்து சின்னநடை கண்டதாய் வாச
மலர்போல் அணைப்பாள் மகிழ்ந்து !

சிற்றெறும்பு இன்னல் சிணுங்கும் மகனின்
சிறுதுயரும் ஏற்றிடாள் சீர்தாய் - அருமை
மலரரும்பு சேயின் மதிபெண்ணைக் கண்டு
மலர்போல் அணைப்பாள் மகிழ்ந்து !

தேர்ச்சி யடைந்தசெய்தி செல்லமகன் சொன்னபோது
கற்சிலை யானாள் களித்ததாய் - சூழ்ச்சி
பலவென்று வேலைபாங் காய்பெற் றவனை
மலர்போல் அணைப்பாள் மகிழ்ந்து !

முதல்மாதச் சம்பளம் மொத்தமாய்த் தந்திட
இதமாய் மகிழ்ந்தாளே இன்தாய் - பதமாய்
பலபேரின் வாழ்த்துடன் பைங்கிளியை ஏற்க
மலர்போல் அணைப்பாள் மகிழ்ந்து !

தனயனின் சிற்சில தப்பிதங்கள் சுட்டும்
துணையரின் சொல்லைதுளி ஏற்காள் - தினமும்
அளவறியா அன்புகாட்டி அன்னை அவனை
மலர்போல் அணைப்பாள் மகிழ்ந்து !

மனையாளின் மந்திரத்தால் மாறிய மகனே
சினந்தும் சினமே அடையாள் - இனிதாய்
நலமாய் தனிக்குடி நாடுக என்றே
மலர்போல் அணைப்பாள் மகிழ்ந்து !

நோய்த்தாக்கி நொந்து நூலாகி தோலாகி
சேயினுக்கு காத்திருக்கும் தாய்மனது - பாயில்
பலநாளாய் படுத்திருந்தும் தன்மகனை நெஞ்சால்
மலர்போல் அணைப்பாள் மகிழ்ந்து !

கழுத்து நகைகளுடன் கைமோதிரம் யாவையும்
இழுத்து மகன்வசம் ஈவாள் - எழுதிய
காலம் முடிவதால் கண்மணியை நெஞ்சில்
மலர்போல் அணைப்பாள் மகிழ்ந்து !

தாய்மையைப் போற்றுக தாய்மையைப் போற்றுக
தாய்மைக் கிணைதாய்மை தானறிக - தாய்மை
மேலுலகம் சென்றபின்னும் மெல்லதன சேயை
மலர்போல் அணைப்பாள் மகிழ்ந்து !

வெ. நாதமணி
09.09.2013.

நன்றி: ஈற்றடி வழங்கி எழுதத் தூண்டிய வழிகாட்டி ஐயா எழில் சோம பொன்னுசாமி அவர்களுக்கு.

எழுதியவர் : வெ. நாதமணி (9-Sep-13, 9:54 pm)
பார்வை : 77

மேலே