சிரித்திரபுரம் - 7

காட்சி - 12
சிம்மாசனத்தில் அமர்நதிருக்கும் மணி, அமைச்சர்களை முறைக்கிறான்.
மணி : என்ன அமைச்சர்களே... கிடுகிடுவென்று எழும்பி வரும் இந்தப் பிரம்மாண்ட மாளிகைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று கேட்டு நீண்ட நேரமாயிற்று. இன்னும் பதிலில்லை...?
மார்த் : வடநாட்டு மன்னன் தான் கட்டிய மாளிகைக்கு ‘தாஜ்மகால்’ என்று பெயரிட்டிருக்கிறாராம். நாம் ‘சிவப்பு தாஜ்மகால்’ என்று பெயரிடலாம் அரசே!
மணி : ச்சே! வடநாட்டுப் பெயர்! அதையா வைப்பது? சுத்தத் தமிழில் ஒரு பெயரைக் கூறும்!
மார்த் : (மனதிற்குள்) ஹும்! சுருக்கமாக எந்தப் பெயரைச் சொன்னாலும் இவருக்குப் பிடித்துத் தொலையாதே. (உரக்க) ‘செம்பொட்டழகர் மணிமாற பாண்டிய செம்மாளிகை’ என்று வைக்கலாம் மன்னவா! காலத்துக்கும் உங்கள் பெயர் சொல்லுமே...!
மணி : அருமை! இந்தப் பெயரையே சூட்டி விடலாம்!
காட்சி - 13
இதன்பின் நிகழ்ந்தவற்றை நாலில் ஒரு பங்காகச் சுருக்கி வரைய வேண்டியிருக்கிறது. ஏராளமான பணியாளர்களைப் பணிக்கு அமர்த்தி, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கி, வெகுவேகமாக மாளிகையை எழுப்பத் துவங்கினான் மணி. வேலை செய்பவர்களுக்கு இரு மடங்கு சம்பளத்தை அள்ளி வழங்கினான். அதில் ஒன்றரை மடங்கை ‘வரி’ என்ற பெயரில் பறிமுதல் செய்தான்.
‘அத்தாணி மண்டபத்தில் நின்று நான் குரல் கொடுத்தால் அது மாளிகையெங்கும் எதிரொலிக்க வேண்டும். அதற்கேற்றபடி கற்களை வையுங்கள்’ என்பது போன்ற பல யோசனைகளை (உத்தரவுகளை?) பிறப்பித்து, கட்டடக் கலைஞர்களைப் பாடாய்ப் படுத்தி, எவ்வளவு விரைவாகச் செய்து முடித்தாலும் அந்த மாளிகை எழும்ப பதினாறு ஆண்டுகள் கடந்துவிட்டன. விளைவு..?
இரண்டு மாடிகளின் படிகளை ஏறியதால் ஜல்லிக்கட்டுக் காளை போல் மூச்சிரைத்தபடி மூன்றாம் தளத்தில் முட்டியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார் மணி.
மார்த் : அரசே...! நடவுங்கள். இன்னும் சற்றே தூரம் நடந்தால் அத்தாணி மண்டபத்தை அடைந்து விடலாம். பாதியில் அமர்வது இழுக்கு.
மணி : அழுக்கா! அதனாலென்ன... சலவை செய்தால் அழுக்கு போய்விடப் போகிறது.
மார்த்: (மனதிற்கள்) ஹும்! வயதாகிவிட்ட கோளாறு... செவிப்புலனும் தேய்ந்து விட்டதே இவருக்கு. (உரக்க) அழுக்கு அல்ல மன்னா, இழுக்கு என்றேன். மன்னர் தன்னுடைய சிம்மாசனத்தில்தான் அமர வேண்டும்!
மணி : முடியாது! இனி ஒரு அடி வைக்க முடியாது. சிம்மாசனத்தை இங்கே தூக்கி வாரும் அமைச்சரே! எம்மைச் சுற்றி அமைச்சர்களும், எதிரேயுள்ள வராண்டாவில் குடிமக்களும் அமரட்டும். ராஜ்ய பரிபாலனம் இங்கேயே செய்கிறேன்.
மார்த் : சிம்மாசனத்தை இடம் பெயர்த்தால் இயற்கை உற்பாதங்கள் வரும், கோட்டைக்கே ஆபத்து ஏற்படலாம் என்கிறது சாஸ்திரம்.
மணி : தளபதீ...! என்று கூச்சலிட ப.கோ.சிங்கன் ஓடி வருகிறான்.
மணி : மன்னனின் கட்டளையை ஏற்க மறுக்கும் இந்த மதிகெட்ட மந்திரியை உடனடியாக சிரச்சேதம் செய்யும்...!
ப.கோ.சிங்கன் வாளை உருவ, அமைச்சர்கள் வேகமாக உள்ளே ஓடிச் சென்று சிம்மாசனத்தை தூக்கி வருகிறார்கள்.
மணி: சிம்மாசனத்தில் அமர்ந்து... (மனதிற்குள்) ஹும்...! நீச்சல் குளம் எல்லாம் வைத்துக் கட்டிய இந்த மாளிகையை எம் உல்லாச ஸ்தலமாக்கி மகிழ நினைத்தேன். அதற்குள் வயது போய் விட்டதே! சொல்லழகன்தான் அனுபவிக்கிறான்! கொடுத்து வைத்தவன்!
பின் கதை : அதன்பின் சொ.சு.வர்மனுக்கு முடிசூட்டி விட்டு மணி இறந்துவிட, அவரது கொள்ளுப் பேரனான மூன்றாம் மணிமாற பாண்டியனின் காலத்தில் ஒரு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு, அந்தக் கோட்டையைக் கபளீகரம் செய்து மாளிகையையும் இருந்த சுவடே இல்லாமல் மண் மேடாகச் செய்து விட்டன. **
- நிறைவு -
======================================
** ஆதாரம் : நீங்கள் வேண்டுமானால் செஞ்சிக் கோட்டையின் எல்லாத் திசைகளிலும் இருபது கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து பாருங்கள். விரிஞ்சிபுரம் என்கிற ஊரோ, செம்பொட்டழகு செம்மாளிகையோ கண்ணில் தென்படாது. இதைவிட இந்த சரித்திரத்திற்கு(!) வேறு என்ன ஆதாரம் வேண்டும். ஹி.... ஹி...!
======================================
பின் குறிப்பு : முழுக்க முழுக்க சிரிப்பதற்காக மட்டுமே இந்த படைப்பு