படிக்கட்டுப் பயணம்!
நாம் இப்போதெல்லாம் ஒரு செய்தியை அன்றாடமும் பார்த்துப் பார்த்துக் கண்கலங்குகின்றோம்.அதுவும் படிக்கின்ற மாணவர்கள்தான் இப்படிப்பட்ட துயர சம்பவங்களுக்கு ஆட்படுகிறார்கள் என்று எண்ணும்போது மனம் மிகவும் கசங்கிப் போகிறது. இப்படிப்பட்ட ஆபத்தான பேருந்துப் பயணம் அவர்களுக்கு ஒரு விளையாட்டாகத் தெரிகிறது.ஆனால் அதனால் அவர்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை.பேருந்து நடத்துனர்களின் எச்சரிக்கைகளை அவர்கள் செவிகளில் வாங்கிக்கொள்வதே இ்ல்லை. இதனால் மாணவர்களுக்கும் நடத்துனர்களுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதும், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப்பற்றி எத்தனை எத்தனை கனவுகளை தங்கள் நெஞ்சங்களில் சுமந்து கொண்டு இருப்பார்கள்?..அவர்களை எப்படியெல்லாம் போற்றி வளர்த்திருப்பார்கள்?. அவர்களுக்காகப் பெற்றோர்கள எத்தனை எத்தனை சுகங்களை இழந்திருப்பார்கள்?. எவ்வளவு பணங்களை அவர்களுக்காக் கொட்டியிருப்பார்கள்?, இவற்றையெல்லாம் கொஞ்சமும் எண்ணிப்பார்க்காமல் நொடிப்பொழுதில் தங்களைத் தொலைத்து விடுகிறார்களே என்று எண்ணும்போது இதயம் துடித்துப்போகிறது.
நொடிப் பொழுதான மகிழ்ச்சிக்காக ஆரவாரம் செயவதால் மற்றப் பிரயாணிகளுக்கும் ஏற்படும் தொந்தரவுகளைப் பற்றி அவர்கள் சிறிதும் யோசிக்கவில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும். தங்களின் பாதுகாப்பைப் பற்றியாவது அவர்கள் சிந்திக்க வேண்டாமா?எதிர்காலத்தில அவர்களில் எத்தனை மருத்துவர்கள் இருப்பார்கள,? எத்தனை பொறியியல் வல்லுனர்கள் இருப்பார்கள்?எத்தனை விஞ்ஞானிகள் இருப்பார்கள்?இத்தனை அறிஞர்களும் இ்ந்த நாட்டுக்குக் கிடைக்காமல் போய்விடுவார்களே.இதனால் நமது நாட்டுக்கும் இழப்புத்தானே. ஆகவே அவர்கள் விளையாட்டாகச் செய்யும் விபரீதங்களால் யார் யாருக்கெல்லாம் எத்தனை எத்தனை இழப்புகள் பாருங்கள்.
வயதுமுதிரந்த காலத்தில் தங்களைப் பேணுவார்கள் என்று தங்களினின் பிள்ளைகளை நம்பித்தானே பெற்றோர்கள் காத்திருக்கிறார்கள்.அவர்களை ஏமாற்றுவதில் என்ன நியாயம் இருக்கிறது?.சிலரின் சிறுபொழுது ஆரவாரமகிழ்ச்சிக்காக பிறரை அல்லல்படுத்துவதற்கு என்ன உரிமை இருக்கிறது?.அவர்கள் இந்த நாட்டின் வளம் என்று நம்பித்தானே அவர்கள் கருவாக உருப்பெற்றதிலிருந்து அவர்களுக்காக வளர்ப்பு,கல்வி, மருத்துவம்,மற்றும் அடிப்படை வசதிகள்-வாய்ப்புகள் என அரசாங்கமும் எத்தனையோ விதங்களில் செலவிட்டு வருகிறது.அத்தனை எதிர்பார்ப்புகளையும் நொடிப்பொழுதில் அவர்களின் விளையாட்டு மரணத்தால் வீணடித்து விடுகிறார்களே.
ஆகவேதான் படிக்கட்டில் பயணம் செய்வோர்க்குச் சொல்கிறேன்.நீங்கள் நாட்டைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை என்றாலும் தயவு கூர்ந்து உங்களது வீட்டைப்பற்றி எண்ணிப் பாருங்கள். உங்களையே நம்பி உங்களையே எதிர்நோக்கிக் காத்திருக்கும் உங்களின் பெற்றோருக்காக,மனைவி, மக்களுக்காக யோசியுங்கள்.தேவைதானா இந்தப் படிக்கட்டுப்பயணம்? வீரசாகசம் செய்வதாக எண்ணி விலை மதிப்பற்ற இன்னுயிரை நொடிப்பழுதில் இழந்து விடாதீர்கள யாரும் உங்களுக்கு வீரச்சக்கரா விருது வழங்கப்போவதில்லை இடமிருந்தால் ஏறிக்கொள்ளுங்கள். இல்லையெனில் அடுத்த பேருந்துக்காக்க் காத்திருங்கள்.உங்களுக்காகக் காத்திருப்போரை ஏமாற்றி விடாதீர்கள்.
கொ.பெ.பி.அய்யா .