வாழ்வமைந்திட வேண்டும்1

நல்லதொரு வாழ்வெடுத்திட வேண்டும் - அங்கே
நறுங்கனிகள் சுவைமிகுந்து பொலிந்த தருவேண்டும்
எல்லையற்று விரிந்திருந்திடவேண்டும் - சோலை
இளங்குயில்நான் இசைபடித்தே வலம்வரும்நிலை வேண்டும்
இல்லையெனத் துயர் இருந்திட வேண்டும் - அங்கே
ஏழ்மையுடன் இயலாமை இடமிழந்திடவேண்டும்
வல்லதொரு மனமெடுத்திட வேண்டும் - இனி
வருவதெல்லாம் இன்பமெனும் வளங்கொழித்திடவேண்டும்

கற்கும்மொழி தமிழ் நிறைத்திட வேண்டும் - பல
காவியங்கள் இலக்கியங்கள் கரைகடந்திட வேண்டும்
பொற்சிலையாய் தமிழ் ஒளிர்ந்திட வேண்டும் - என்
பூசைதன்னில் கவிதையெனும் பூச்சொரிந்திட வேண்டும்
பற்றினிலே நானிழைந்திட வேண்டும் - தமிழ்
பாவையுந்தன் காலடியில் பணிபுரிந்திட வேண்டும்
உற்றதுயர் ஒன்றிலை யெனவாகும் - என்
உள்ளமதில் உனைநினைத்தே ஓங்கிடும் நிலைவேண்டும்

தேன் தமிழில் சுவைநிறைந்திட நாளும் - நான்
தீந்தமிழில் பாவளித்திட நீமகிழ்ந்திடவேண்டும்
வான் எழுந்து நான்பறந்திடும் இன்பம் - இவ்
வையகத்தில் வாழுகின்ற வேளை கண்டிடவேண்டும்
ஏன்தமிழே எனை வருந்திடும்வாழ்வில் - எதில்
இன்பமது கொள்ளுவை யென்றியல் புணர்த்திட வேண்டும்
ஊன் உயிரும் சேர்ந்துழன்றிடும் நாளில் - என்
உடல்தனிப்பின் உயர் ஒளியில் ஒன்றுசேர்ந்திட வேண்டும்

எழுதியவர் : கிரிகாசன் (12-Sep-13, 4:07 am)
பார்வை : 68

மேலே