இழந்தவரை எண்ணி ..!

உயிராய் தீயின் உரிமைப் பொருளாய்
உலகைக் காண வந்தோம்
பயிரும் மரமும் படருங் கொடியும்
பார்த்தோம் நாமும் வளர்ந்தோம்
வெயிலும் மழையும்கண்டோம் வாழ்வில்
விருப்பங் கொண்டேநின்றோம்
மயிலின் நடமும் மானும் கண்டோம்
மனதில் களிப்பே கொண்டோம்

கயிறும் எறியக் கதியும் முடியும்
கவலை அற்றுச் சிரித்தோம்
பயிலும் காதல் கணைகள் வீசப்
பலியென்றாகித் தொலைந்தோம்
வயிரம் அற்றே வழமை வாழ்வில்
வழியென் றிருளில் நடந்தோம்
துயிலைக் கண்டோம் சுகமும் கொண்டோம்
துடித்தோம் துயரில் உழன்றோம்

ஒயிலில் வடிவாள் உள்ளம்கண்டோன்
உணர்வைப் பகிர்ந்தே உவன்றோம்
புயலைக் கண்டும் பொறுமை கொண்டோம்
புதைந்தோம் ஓடித்தொலைந்தோம்
மயங்கிக் கிடந்தோம் மாயைதன்னில்
மூழ்கித் தவித்தோம் எழுந்தும்
வியந்தோம் உறவும் விழிகள் மூட
விழித்தோம் விரைவில் விட்டோம்

கயமை செய்வோர் களத்தில் கண்டார்
காயம் மண்ணுல் கொண்டார்
பயத்தை விலையும்,கேட்டார் தம்மின்
பாசம் கண்டே வியந்தோம்
தயக்கமின்றித் தர்மம் கொல்லத்
தனியே கிடந்தே அழுதோம்
தியங்கிக் கிடந்தோம் திரிந்தோம் வாழ்வின்
திசைகள் முடிவைப் புரியோம்

அழிந்தோம் உலகில் இழிந்தோம்
காலின் உதைகள் பட்டே நொந்தோம்
மொழிந்தோர் தமிழின் மூச்சென் றுணர்ந்தோம்
மூச்சும் இழந்தோம் மெலிந்தோம்
அளந்தே நிலமும் ஆண்டோர்குலமாம்
ஆற்றல் தன்னை அழிக்க
குளமென்றோடும் கண்ணீர் நதியில்
குளித்தும் ஏனோ குனிந்தோம்

அலையும் கடலும் அணைக்கும்
காற்றும் அதிவேகத்தில் உலகும்
தலையும் சுற்றி தளரா தோடும்
தருணம் எம்மைப் பற்றி
நிலையாய் கொண்ட நிகழ்வைக் கொண்டே
நிதமும் நடந்தோம் நின்றோம்
இலையென் றொருநாள் இயக்கம் நின்றால்
எங்கே போவோம் அறியோம்

அவளே தந்தாள் அவளே கொண்டாள்
அதுதான் வரையும் வாழ்வில்
தவளும் வகையும் தாங்கக் கால்கள்
தரையில் திரியும் நடையும்
பவளம் போலும் மேனிமிளிர்வும்
பயிலுங் காதல் உணர்வும்
கவளஞ்சோறும் காணேல் பசியில்
காயம் இழியும் நிலையும்

கலையும் அறிவும் கல்விச் சுகமும்
கானம் பாடும்திறனும்
சிலைபோற் செல்வக் குழந்தை வரமும்
சிகையில் வெள்ளை நிறமும்
அலையாய் திரையும் அழகுத்தோலும்
அதன்பின்னாலே மரணம்,
விலையில் வாழ்வின் சூன்யம் ஆக்கும்
விதமும் ஏனோ புரியேன்??

எழுதியவர் : கிரிகாசன் (12-Sep-13, 5:48 am)
பார்வை : 74

மேலே