தீப ஒளி திருநாள்

நரகத்து அசுரனை
நசுக்கி நீ கொன்றதால்
நகரமே கரி எரித்து
காற்றுவெளியை கொலை செய்ய
கண்டிட்டும் பேசா மடந்தை நீ
கல்லென நிற்பதுவோ
கண்கண்ட தெய்வத்துக்கழகு .

பொசுக்கப்படும் மத்தாப்பு ஒளியின்
பார்வை மீறிய இருட்டில்
பதிந்து கிடக்கிறதென்
சிவகாசி சொந்தங்களின்
சிரிக்க இயலாத
சிதை வாழ்க்கை .

வெடிகளின் ஒலிக்கிடையில்
ஒளிந்திருக்கும் ஓலத்தில்
வலிகள் மட்டுமிங்கு
வழிகள் என ஆகிப்போனதால்
விழிகள் கண்ணீரில் குளித்திருக்க
தீராவலியாய் வந்துபோகுது
தீபாவளி திரு நாள் இங்கு.

கால் முளைத்த பூக்களாம்
கலாமின் நம்பிக்கை சிறார்கள்
கந்தக கலவையில் இழந்துவிட்ட
கல்விக்கனவை தேடியதில்
கரித்தூள் மட்டுமே மிச்சமன்றோ .

நடக்கத்தொடங்குகையிலே முடிந்துவிடும்
நரகமான அறைக்குள் தயாரிக்கப்படும்
குறுஉரு காலனாம் பட்டாசின்
கருவறை கந்தகம் பற்றிய விபத்தில்
கரைந்திட்ட உயிர்கள் தான் எத்தனை .
பிரிந்திட்ட அவ்வுயிர்களின்
பிரிவினால் வாழ்விழந்த
பிள்ளைகள் தான் எத்தனை ?

நுரையீரல் தொட்ட காற்றில்
அமிலத்து துளி வாங்கியதால்
கைக்கொண்ட கூலியைக்கூட
கைகோர்த்த நோய்க்கிங்கு
தேய்த்திட்டே முடங்கிய
தேய்பிறைதான் எத்தனை ?

கடவுள்களையே சரமாய் தொடுத்தும்
விடிவுகளையே காணா வாழ்கையையே
முடிவுகளாய் வித்திட்டு போனதால்
முகமூடி மட்டுமே உன்
முகமெனக் கொள்வதோ
மொழிந்திடு நீ இறைவா .

எரிந்த புண்ணில்
எறிந்த ஈட்டிப்போல்
முன்தோன்றி கும்பிட்டு
உருவான அரசின்
தான்தோன்றி முடிவாலே
அந்நிய பட்டாசும் வந்து
அடிவயிற்றில் அடித்துவிட்டு
வயிற்றுக்கு உணவில்லா ஏழையைக்கூட
கழுத்துக்கு கயிறு தர கேட்குதம்மா .

வண்ணம் புனைந்த ஓவியமாய்
எண்ணம் நிறைந்த கடவுளே
திண்ணம் உனது இருப்பென்றால்
முன்னம் வா இவனுயிர் போகும்முன்னே !

எழுதியவர் : திகம்பரன் (12-Sep-13, 6:40 am)
பார்வை : 171

மேலே