காதல் கொள்வீர் காதலை கொல்லாதீர்

கருவிழி கலங்கி கண்ணீர் வருகிறதே
உன்னுள் ஏனோ நிலவொளி தெரிகிறதே
என்னுள் வளரும் ஒரு காதல் ..அது
விண்ணில் கரையும் ஒரு நிலவா ?...

கண்ணில் ஏனோ உறக்கமில்லை
விடிந்த பின்னும் வெளிச்சமில்லை
வலியில் விழியும் கரைகிறதே
கரைந்தும் இதயம் கனக்கிறதே

கருவறை பாசம் மறந்திடுமோ ?
கல்லறை நோக்கி ஊர்வலமோ ?
களிப்பில் வாழ்ந்த களி முகமோ
காய்ந்த சருகாய் நகர்வலமோ ?

சாபம் செய்த ஒரு சதியா?..
சாகும் வரையும் தலை விதியா ?
விதியென்று நினைத்து வாழ்வேனோ
விரக்தியில் வீழ்ந்து போவேனோ

விழிகள் மூட மறுக்கிறதே
வியர்த்து வலியில் துடிக்கிறதே
துடிக்கும் இதயம் தூங்கிடுமோ?
துணிந்தே உயிரும் துறந்திடுமோ?

உனக்கென வாழும் உயிர்தானே
உதிரம் உதிர்த்து துடிக்கிறதே
உன்னைப் பிரியும் ஒரு வரமோ
உயிரைப் பிரியும் நிலை வருமோ ?

உண்மைக் காதல் இதுவென்று
உரத்த குரலில் உரைப்பாயோ ?
மவுனம் காத்து மறைப்பாயோ
உயிரைப் பறிக்க நினைப்பாயோ?

மனதோ மறக்க மறுக்குதடி
மரித்தே போக துடிக்குதடி
தனித்து வாழ மனம் வருமோ
துணிந்தே வாழ்ந்தால் துறவறமோ ?

புன்னகை சூழ்ந்த மதிமுகமோ
புகையால் சூழ்ந்து தவிக்கிறதே
மாது உன்னை மறந்திடவே
மனதும் மதுவை மணக்கிறதே

மரணம் கூட மறுபிறவி ... நீ
மறுத்து விட்டால் நான் துறவி !
மரணம் கூட பயந்தே போகும்
மருந்தே நீதானடி ......
எனை மறந்தே போனாயடி .......
என் கனவே நீதானடி
கலைந்தே போனாயடி........

-----------------------------------------------------
ஏங்கித் தவிக்கும் இளம்பிறையே !
உண்மைக்காதல் ஒருமுறையே!
உணர்ந்து வாழ்வீர்! இளைய தலைமுறையே!

கன்னியரும் காளையரும்
காதல் கொள்வீர்! மறந்தேனும்
காதலைக் கொல்லாதீர்!
- அழகர்சாமி சுப்பிரமணியன் (அ.சு )

எழுதியவர் : அழகர்சாமி சுப்பிரமணியன் ( (15-Sep-13, 10:11 am)
பார்வை : 1424

மேலே