அவன் மனசுக்குள்ள....... க(வி)தை

ஊருக்குள்ள கேசவனுக்கு எந்த சாதியுமில்ல

ஏனென்னு கேட்கவொரு நாதியுமில்ல

சொத்து பத்தென அவனுக்கு சிறு நிதியுமில்ல

அவன் படுத்துப்புறலாத வீதியுமில்ல



பித்தனவனை வழிநடத்த ஒரு பதியுமில்ல

கூட்டுக்குள்ள அடைச்சு வைக்க அவன் கைதியுமில்ல

கால்வயிறு நெறையும் ஊரார் கொடுக்கும் உணவுப் பொதியினில

இவன் பழைய வாழ்க்கைய சொல்ல எந்தப் பதிவுமில்ல



கேசவன்னா பெருஞ்செல்வந்தன் தானே ஆதியில

அவனுக்கு காதலியாய் வந்து சேர்ந்தாள் சுமதிபுள்ள

இவுங்க காதலுக்குத் தடையுன்னு ஒரு பீதியுமில்ல

அவுங்க சந்திக்காத நாளுன்னு எந்த தேதியுமில்ல



இறந்து பொய்யாய் போனது இந்தக் காதல் பாதியில

இது யாரும் செய்த திட்டமிட்ட சதியுமில்ல

குளிக்கப் போனவ உடல் மட்டும் மிதந்தது நதியினில

இத கேட்டதுமே இவன் இதயத்துல சிறு அதிர்வுமில்ல



அவளோடு இவன் வாழ இனி விதியுமில்ல

கேசவனின் வாழ்க்கையில சுகமான சுதியுமில்ல

அவளைவிட்டால் இவனுக்கு வேறு எந்த பெண்ணும் ரதியுமில்ல

கற்பனையில அவளிடம் இவன் சொல்லாத சேதியுமில்ல



சிந்தித்து செயல்பட அவனுக்கு மதியுமில்ல

சொத்துக்கள பாதுகாக்க ஒரு கதியுமில்ல

சொந்தங்களே அத அபகரிச்சது நீதியுமில்ல

இப்ப அவன் இருக்க ஒரு சின்ன வதியுமில்ல



தெருவில கெடந்தாலும் அவன் மனசுக்குள்ள.......

மூச்சு நிக்குற வரை வாழ்ந்திருப்பாள் சுமதிபுள்ள!

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (17-Sep-13, 8:57 pm)
பார்வை : 232

மேலே