"என் பிள்ளை"

"என்ன இன்னைக்கி ஒரு மாதிரியா தெரியரிங்க மேடம்!"

"ஒண்ணுமில்லையே!"

"இல்ல ஏதோ இருக்கு!"

"என்னங்க அப்படி பார்க்கிறீங்க?"

"டேய்! டேய் நில்லுடா! இந்தா கேசரி!"

"எதுக்கும்மா கேசரி?"

"ம். எனக்கும், உன்னோட பொண்டாட்டிக்கும் இன்னைக்கு பயங்கர சண்டை. அத இந்த‌ தெருவே வேடிக்கை பார்த்துச்சு. நான் தான் ஜெயிச்சேன். அதுக்குத்தான் கேசரி"

சுரேஷின் வாயில் ஸ்பூனை வைத்துக்கொண்டே, சுரேஷின் அம்மா மருமகள் வள்ளியை ஒரு பார்வை பார்க்க,

"பின்னே என்னங்க. கொஞ்ச நேரம் அசந்து தூங்கீட்டேன். அதுக்காக ஊரையே கூட்டி ஒப்பாரி வைக்கிறாங்க", என வள்ளி சொல்ல, ஒன்றுமே சொல்லமுடியாமல் சுரேஷ் அம்மாவை பார்க்க,

அம்மா சிரித்துக்கொண்டே, "டேய் என்னைக்குடா நா இவள மருமகளா நினைச்சேன். இவ வந்தப்புறம் தான் எனக்கு மக இல்லாத குறையே போச்சு. ச்சும்மா, ஒன்னோட ரியாக்/ஷன் எப்டி இருக்குன்னு பார்த்தோம் ரெண்டு பேரும். இல்லையா வள்ளி?"

"அச்சச்சோ, இவரு முகத்த பாருங்க அத்தே, அசடு வழியுது", என வள்ளி சிரிக்க,

"உன்ன என்ன பண்றேன் பாரு", என மனைவியை சுரேஷ் துரத்தப்போக‌

"டேய் டேய் நில்லுடா! அவ இப்ப ஓடக்கூடாது. அவள அழைச்சிட்டு ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வா"

"ஆஸ்பத்திரிக்கா எதுக்கு?"

"ம். அவளையே கேட்டுக்க", என்றாள் அம்மா.

சுரேஷ், வள்ளியை ஒரு பார்வை பார்க்க, அவள் வயிற்றில் கையை வைக்க, அந்த சந்தோஷம் தாங்கமுடியாமல் ஒரு சிகரெட்டை எடுத்து வேகவேகமாக ஊதித்தள்ளினான் சுரேஷ்.

"என்னடா, ஊதர வேலையை முடுச்சிட்டியா?. சரி சரி கிளம்புங்க"

"அத்தே! நீங்களும் வாங்க. எனக்கு என்ன எப்படி சொல்லறதுன்னு சொல்ல கூச்சமா இருக்கு!"

சரி என மூவரும் கிளம்பி ஆஸ்பெட்டல் சென்று வந்தனர்.

வள்ளியின் வயிற்றில் அழகான கவிதை உருவானது.

மறுநாளில் இருந்து சுரேஷிடம் ஒரு மாறுதல்.

அம்மாவுக்கு புரியவில்லை.

"வள்ளி என்ன இவன் எப்போதும் பரபரப்பா சிகரெட் ஊதிக்கிட்டே இருப்பான். இப்ப ஆளே மாறிட்டானே!"

"அதான் அத்தே, எனக்கும் ஒண்ணும் புரியல, எனக்கு வேளாவேளைக்கு மாத்திரை எடுத்து தர்றது, நடக்க சொல்றது, அப்பப்பா இப்போ அன்பு ரொம்ப அதிகமாயிடுச்சு அத்த‌"

"டேய் சுரேஷ்!"

"என்னம்மா?"

"என்ன, அய்யா, அப்பா ஆன சந்தோஷமாடா?. ஆளே ரொம்ப மாறிட்ட. நான் என்ன சொன்னாலும் கேக்கமாட்ட. முன்னாடிலாம் எதுக்கெடுத்தாலும் ஊதீத்தள்ளுவ. கொஞ்ச நாளா கண்ணுலய படலையே!"

"ஆமாம்மா. டாக்டர பார்க்க போயிருந்தப்ப, என்னை டாக்டர் தனியா கூப்பிட்டு, நீங்க பேசும் போது சிகரெட் வாசனை வந்துச்சு, நீங்க சிகரெட் பிடிக்கும் போது அது கண்டிப்பா உங்க மனைவி மூக்குக்கு போகும். அது அப்படியே வயிற்றுக்குள் இருக்கும் சிசுவுக்கும் போகும். அது நல்லதில்ல, அது ரொம்ப ஆபத்தானதுன்னு சொன்னாங்க. அதான் உடனே சிகரெட் பிடிக்கறதையே நிறுத்திட்டேன்!"

"டேய், அதத்தான் நானும் இத்தன நாளா சொல்லீட்டு இருந்தேன். ஏம்புள்ள நீ கேட்டுப்போக கூடாதுன்னு, ஆனா இப்ப ஓம் புள்ளைக்காக நீ திருந்துனது நெனச்சா ரொம்ப சந்தோஷமாயிருக்கு!"

"ஒங்க பேச்ச கேக்காததற்கு ரொம்ப சாரிம்மா!"

வள்ளி டாக்டருக்கு மனதுக்குள்ளேயே நன்றி சொன்னாள்.

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (18-Sep-13, 6:54 am)
பார்வை : 252

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே