@@@படைத்தவனே பாதகனே @@@

வேடிக்கையாய் பார்க்கையில் கூட
வெந்துத் தனிகிறது என் மனம்
வேதனையாய் விடிகிறது -எனக்கான
ஒவ்வொரு விடியல்களும்!!!

ரசிக்கின்ற மனமிருந்தும்
அறிகின்ற உணர்விருந்தும்
புலன் உறுப்பிருந்தும்
உதவியின்றி செயல்படமுடியாமல்
உயிரும் உஷ்னமாக நானிங்கு!!!

என் இயலாமையால் உள்ளுக்குள்
நெருப்பாய் கொந்தளிக்கிறேன் நான்
என்பாவம் செய்தால் என்தாய்
என்னை பார்க்கும் நேரமெல்லாம்
ஒவ்வெரு முறையும் ஓராயிரம்
பிரசவ வலி பொறுக்கிறாளே!!!

நீ வரைந்த ஓவியத்தின்
பிழையா என்போன்றோர்
உன் அரைகுறை படைப்பிற்கு
ஆளாக்கப்பட்ட அர்த்தமற்றோர்!!!

ஈக்கும் எறும்புக்கும்
இன்னன்ன வாழ்வென்று
பிரித்தாயே அதில்
இதுவும் ஓர் வாழ்வா
எத்துனை பிஞ்சுள்ளம்
கருகிப்போனதோ என்போல்!!!

வடித்த சிலையில் வாழும் நீ
உனக்கு வடிவம்தர வாழ்வை
அர்பணித்து ஒதுங்கிய
கற்களின் வலி அறிவாயோ!!!

படைக்க நேரமில்லையென்றால்
நிறுத்திவிடு உன் ஊனப்படைப்பை
நூறில் ஒன்றென்று பதிலுரைக்காதே
நூறுபேரின் வலி ஒருத்திகென்றால்
நினைத்துப்பார் நிகழ்வை!!!

கைக்குழந்தைக்கு கள்ளிப்பாலூட்ட
இரக்கத்தோடு என்தாய் இருந்துவிட்டால்
நான் இறக்கும் வரை அவள்
இறந்துகொண்டே இருக்கிறாள்!!!

வேதனையின் விசும்பல்கள்
விருட்சமாய் என்னுள்
வேரூன்றி விட்டது
இவளோடு நிற்கட்டும்
உன் வன்கொடுமை
வருங்காலத்திலும் வேண்டாம்
இந்த வலியின் வேதனை!!!

என்னோடு இறுதியாக்கு
என் கையாலே செய்கிறேன்
அதற்க்கு ஈமச்சடங்கு
இத்தோடு இல்லாதொளியட்டும்
உன் அரைகுறை படைப்பு!!!

படைத்தவனே
கருனையுரைக்கவில்லை
கடிந்துரைக்கிறேன் !!!
...கவியாழினி...
(மூளை வளர்ச்சி குறைவால் பாதிக்கப்பட்ட சுயமாக செயல்பட முடியாத ஓர் குழந்தையின் உள்ளத்தின் எண்ண வெளிப்பாடாய் இக்கவிதை )

எழுதியவர் : கவியாழினி (18-Sep-13, 10:53 am)
பார்வை : 124

மேலே