அஞ்சுவதும் கெஞ்சுவதும் எங்களுக்கு தெரியாது

இனித் துயரைப் பாடி அழுவதை நிறுத்து
அற்புத சக்திகள் அருள் தருமென்பதை
சத்தியமாகக் கைவிடு
தேசம் காத்தவரின் தேகம் வீழும் காணொளியை
தேடித் தேடிப் பார்ப்பதை தவிர்
கண்டியிலிருந்த புத்தன்
வண்டியேறி முறிகண்டி வந்துவிட்டான்
அண்டிப் பிழைப்பது தவிர
இனியென்ன வழியென்று மண்டியிட்டு வாழாதே
சண்டையிடு
அல்லாது போனால்
நேற்றைக்கு உன் கையிலிருந்த
முற்றத்து மண்ணும் இல்லையென்றாகும்
பட்டம் விட்டு விழுந்தெழும்பி
பாடித் திரிந்த வயல் முழுதும்
வெள்ளியிட்ட காலுக்கு
வெறுங்கால் அடிமையென
சொல்லிச் சொல்லிக் குரைக்கிறது
சொறி நாய்
தண்டவாளம் ஏறி யாழ்தேவி வந்தால்
தந்து போகுமா சுதந்திரம்
மாறாய்
கொழும்பின் வண்டவாளம் மறைக்க
வந்து போகிறது எம் வாசல்
வீழ்ந்தது பற்றியே வீண் கதை பேசாதே
எழுவதைப் பற்றி நினை
வானமேறி அனுமன் வந்து
வரம் குவித்துப் போவானென
கனவிலேறி நிஜமிழந்து
நிவாரண வரிசையில் நிற்போமா
காய்ச்சல் எவனுக்கு வருகிறதோ
அவனே பனடோல் போட வேண்டும்
பாய்ச்சல் எவனுக்கு தெரிகிறதோ
அவனே . . . . . . . . . . . .. . . .
ஞாலப் பெருவெளியில் குனிய மறுக்கும்
ஆதி மனிதன் தமிழன்
அவன் ஆழ உயிர் வரை நீண்டுஓடிய
ஈழத் தாகத்தின் ஆணிவேர் எப்படிப் படும்
வீழ்ந்த ஊத்தையை உரஞ்சிக் குளித்து
வீழ்ந்தவர் கனவை வெல்வது தர்மம் .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (19-Sep-13, 1:22 pm)
பார்வை : 95

மேலே