என் தவறுகளோடு நான்....
அணைக்கப் படாத
மேஜை விளக்குப் போல
எரிந்து கொண்டிருக்கிறது
எனது தவறுகள்...
விழிகளை மூடாமல் எனக்குள்ளேயே.
உதை வாங்குதலும்...
உதைத்தலும்...
அதற்குப் பழக்கமானாலும்...
அது விலகுவதில்லை...
என் நிழலைப் போல என்னை விட்டு.
அச்சு தவறிய இயந்திரத்தில்...
வனையப்பட்ட மண்பானையாய்....
என் முகம் சிதைத்தாலும்...
என் கை குலுக்கும் எதிரியாய்
சிரித்தபடி...
என் நலம் விசாரித்துத் திரிகிறது
எனது தவறுகள்.
எனக்குள்...
என்று விழுந்தன
எனது தவறுகள்...என்பது
எனக்கேயான கேள்வியாய் இருந்தாலும்
தன பிறந்தநாளைத்
தினம் தினம் கொண்டாடியபடி
எனக்குள் திரிகிறது என் தவறுகள்.
கடவுளை காட்டி
நான் என் தவறுகளை
எச்சரித்த போதும்...
இன்று...
என் கடவுளை...
எச்சரித்தும்...நச்சரித்தும்...
தன திசைக்குத் திருப்பிவிட்டன..
என் தவறுகள்.
திசை தவறிய குழந்தையென...
நடுவழியில் கடத்தப்பட்ட குழந்தையென...
நான் தவித்துத் திரிகிறேன்...
என் வழியெங்கும்...
தவறுகளிலிருந்து விடுதலை வேண்டி.
என் உயிர் உருகிப் பிரார்த்திக்கும்...
இந்தக் கணத்திலும்...
என் விழி தழுவி...
போலிச் சிறகுகளால்
நெய்யப்பட்ட ஒரு வண்ணத்துப் பூச்சியென
கண் சிமிட்டி என் மேல் ஊர்கிறது
இன்று பிறந்த ஒரு புதுத் தவறு.