முற்படுத்தப்பட்டவள்
பாயோடு பாயான தந்தை
இரவெல்லாம் இருமி இருமி
இருண்டு போன வீடு !
பக்கத்து வீட்டில் பாத்திரம் கழுவி
தாய் தரும் அமுதம் பழைய சோறு !
அடுப்பில் எரியாத தீ வயிற்றில் எரிய
ஈரத் துணி கட்டி முறுக்கி,
மண்ணெண்ணெய் விளக்கொளியில்
மனதெல்லாம் நிறைத்த
மருத்துவர் கனவை -
தசமத்தில் தவற விட்டாள்!
அரை வயிற்று கஞ்சியுடன்
ஊற்றி ஊற்றி நிறைத்த கனவு
அரை சதமானத்தில்
வெருங் கனவாகிப் போனது !
முற்பட்டவள் என்பதனால்
உதவிக்கு அரசும் இல்லை
உத்திரவாதமில்லா
கடனுக்கு வங்கி இல்லை!
கிட்டிய வகுப்புக்கும்
பணம் கட்ட இயலாமல்
படித்த கதை பழங்கதையாக்கி
வளையல் கடையில்
விற்பனை பெண்ணாய் !
யாரோடும் கோபமில்லை
யாருக்கும் சாபமில்லை
ஒன்று மட்டும் புரியவில்லை- தான்
எதில் முற்பட்டவள் என்று!
உள்ளவர் ,இலார் என
இரு பிரிவே உண்டென்று
எடுத்துரைக்க யார்க்கியலும் !