ஊமை வார்த்தைகள்

என் வீட்டு முற்றத்தில்
தனியாக நான் பேசிக்கொண்டிருந்த போது
என்னை பார்த்து ஏளனம் செய்த காக்கைகள் எதுவும்
நீ வைக்கும் விருந்திற்கு வந்ததில்லையா
வந்திருந்தால் சொல்லியிருக்குமே
“வானத்தை பார்த்து
ஒருவன் வெட்கம் கொள்கிறான்” என்று

நான் தினந்தோறும் பயணம் செய்யும் பேருந்தில்
ஒரு நாளும் உன் பயணம் இருந்ததில்லையா
இருந்திருந்தால் சொல்லியிருக்குமே
“கூட்டத்தின் நடுவே ஒருவன் தனியாக சிரிக்கிறான்” என்று .

என் நண்பர்களின் காதலை வளர்க்க
நான் எழுதிய கவிதைகள்
உன் தோழிகள் மூலம்
உன் காதுகளை எட்டவில்லையா .
எட்டியிருந்தால்
உன்னால் உயிர் பெற்ற என் கவிதைகள்
சொல்லியிருக்குமே
அவை உனக்காக எழுதப்பட்டவை என்று .

நான் அவ்வப்போது செல்லும் கோவிலுக்கு
நீ ஒரு போதும் சென்றதில்லையா
சென்றிருந்தால்
அங்கிருந்த சிலைகள்
சொல்லியிருக்குமே
“வரமாய் ஒருவன் உன்னை கேட்கின்றான்” என்று

உன் வீட்டு வாசற்படியை
நீ கடந்து செல்லும் போது
அது உன்னிடம் சொன்னதில்லையா
“நீ வெளியே வரமாட்டாயா என்ற ஏக்கத்துடன்
இவ்வழியே ஒருவன் வந்து செல்கிறான்” என்று

என்னை சுற்றி இருப்பதெல்லாம்
உன்னை எனக்கு நினைவுப்படுத்துகிறதே
உன்னை சுற்றி இருக்கும் எதுவும்
என்னை உனக்கு
நினைவுப்படுத்துவதில்லையா

ஒருநாளும் நான்
உன் கனவில்
வந்ததில்லையா
இல்லை
அங்கும் நான்
பேச தயங்கி கொண்டிருந்தேனா

“உன்னை யாரேனும் காதலிப்பதாக சொன்னால்
என்ன நினைப்பாய்?”
என்று கேட்டதற்கு.
“இவனின் இரசனை இவ்வளவு மோசமானதா!”
என்று நினைப்பேன் என்றாய்.
அந்த உரையாடலின் போது
உனக்கு புரியவில்லையா
அந்த மோசமான இரசனைக்கு சொந்தக்காரன்
நான் என்று.

நான் சொல்லாத என் காதலை
யாரும்
எந்த நிகழ்வும்
உனக்கு உணர்த்தவில்லையா

நானே நேரடியாக உன்னிடம்
சொல்லிவிட நினைத்து தான்
வார்த்தைகளை தெரிவு
செய்து கொண்டிருந்தேன்
அதற்குள் பொறுமையிழந்து
நீ கிளம்பிவிட்டாய்


அன்று
புதைக்கப்பட்டது
உனக்காக நான் வைத்திருந்த வார்த்தைகள்

அந்த
ஊமை வார்த்தைகள் தான்
இன்று என் கவிதைகளாய்!

எழுதியவர் : சுதாகர் கதிரேசன் (23-Sep-13, 3:23 pm)
Tanglish : uumai varthaigal
பார்வை : 190

மேலே