விடுதியில் இருந்து அம்மாவுக்கு ......
கண்ணீர் என்பதையே
மறந்து போன என் கண்ணில்
கடல் ஒன்னு பொங்கி நிக்குதுமா.
வெக்கையில வீசும் காத்த
உன் நெனப்பு வந்து போகையில
வீட்ல இருந்து வெளிய போகும் போது
எதையாவது மறந்துடுவேன்
இந்த முறை என் சுகத்த மறந்து
அங்க
வச்சுட்டுவந்துட்டேன்மா
உன்ன விட்டு வந்த போது
ஊருவிட்டு வந்த போது
என்ன விட்டு போன என் தூக்கம்
இன்னும்
என்ன வந்து சேரலமா.
‘பசி’ ன்னு வயிறு சொல்லும் முன்ன
நீ சமைச்சு வச்ச போது,
நா தூக்கி எரிஞ்ச தட்ட இப்போ
இங்க வந்து தேடுறேம்மா.
என்ன நா செய்யுறேன்னு தெரியுமா
என்ன பாராட்டுற மனச
இங்க பாக்க முடியலையேம்மா!
ஊரு கூடி வச்ச பேர்ல
ஒருநாளும்
என்ன நீ அழைச்சதில்ல.
நீ அழைக்கும் பேரில் என்ன
இங்க
யாருமே அழைப்பதில்ல.
நீ உட்கார்ந்து கேக்குறது மாதிரி
நா பேசும் பேச்சை
இங்க யாரும் கேக்குறதில்லையேம்மா
அசந்து
நீ,என் பேச்சை கேக்குறத பாத்து
ரசிக்கும் படியா ஏன் பேச்சு இருக்குதுன்னு
பெரும பட்டேன்னேம்மா
என்ன நீ
தூக்கிக்கிட்டு நடந்த போது
வானத்த மட்டும் நா பார்த்து வந்த வழியில
முள்ளா கொட்டி கிடக்குதேம்மா!
இதுவரைக்கும்
சொர்க்கத்துல என்ன வச்சிருந்து
இது தான், ‘உலகம்’ன்னு
ஏமாத்திட்டிருந்தியாம்மா!
ஒன்னும் புரியலையேம்மா
மனசு கேட்ட கேள்விக்கு
பதில் தெரியாம புத்தி தடுமாறுதும்மா
வளக்காம
குழந்தையாவே என்ன நீ
வைச்சிருந்தா
உன் மடியிலேயே எப்பவும் இருந்திருப்பேனே மா.