மௌனத்தின் சொந்தக்காரர்கள்
நம் வார்த்தைகள்
காற்றை காயப்படுத்திக்கொண்டிருந்த
வேளையில்
அவர்களின் வார்த்தைகள்
காற்றை வருடிக்கொண்டிருந்தது
நம் வார்த்தைகள்
பிரச்சனைகளை எழுப்புவதாய்
இருந்த வேளையில்
அவர்களின் வார்த்தைகள்
பிரச்சனைகளை தடுக்கும்
அணையாக இருந்தது
நம் வார்த்தைகள்
இரைச்சலுக்கு வடிவம்
கொடுத்துக் கொண்டிருந்தபோது
அவர்களின் வார்த்தைகள்
சங்கீதத்தின்
புது வடிவமாய் காட்சியளித்தது
நம் வார்த்தைகளில்
கலப்படம் இருந்தது
அவர்களின் வார்த்தைகள்
தூய்மையின் இருப்பிடமாக
திகழ்ந்தது
நம் வார்த்தைகள்
உண்மையின் பிம்பமாக
இருந்தது
அவர்களின் வார்த்தைகள்
உண்மையின் ஒளியாக
இருந்தது
நம் வார்த்தைகளில்
வேற்றுமை இருந்தது
அவர்களின் அகராதியில்
வேற்றுமை
அர்த்தமற்றதாய் இருந்தது
நம் வார்த்தைகளால்
உணர்த்த முடியாதவைகளுக்கு
அவர்களின் வார்த்தைகள்
விளக்க உரை அளித்தது
நம் வார்த்தைகள்
பல முகங்களை
கொண்டிருந்ததன் காரணமாய்
அவர்களின் வார்த்தைகள்
இடம் கொடுக்காத
தவறான புரிதலுக்கு
இடம் கொடுத்து வந்தது
நம் வார்த்தைகள்
உருவம் கொண்டிருந்த போதும்
உருவமற்ற
அவர்களின் வார்த்தைகள் போல்
அழகானதாக
தோற்றமளிக்கவில்லை
நாம்
சப்தங்களை வைத்து
சண்டையிட்டு வந்தோம்
அவர்கள்
மௌனத்தை வைத்து
இசையமைத்துக் கொண்டிருந்தார்கள்
மௌனம்
நமக்கு
அறிமுகம் இல்லாத
ஒன்றாய் இருந்தது
அவர்கள்
மௌனத்தின்
சொந்தக்காரர்களாய் இருந்தார்கள்