ஒரு மாயம் செய் போதும் !!

எங்கிருந்து வந்தாய் நீ !
என்ன மாயம் செய்தாய்
எனை மறந்து உனை நினைக்க
என்ன மாயம் செய்தாய் நீ!

சிரிப்பினால் என் மனம்
சிறையெடுத்தாய் –கண்
சிவப்பினால் என்னுள்
சிறை புகுந்தாய் - .உன்
மௌனத்தில் நான்
மரணம் கண்டேன்
என்ன மாயம் செய்தாய் நீ!

மெய்யல்ல பொய்முகமே
என்றுரைத்திட்ட பலர்
மெய் திரும்பு முன்னர்- என்
எண்ணமதில் நீ நிறைந்து
ஏக்கம் பெறச் செய்தாயே
என்ன மாயம் செய்தாய் நீ !

காணாத பொழுதுகளில்
கனவிலும் கலந்து
கண்ட பொழுதுகளில்
நேரிலே மறையும் உன்
வண்ண ஜாலங்கள்
வகை வகையாய் கண்ட பின்னும்
வழி பார்த்து காத்திருக்க
என்ன மாயம் செய்தாய் நீ !

காற்றெலாம் கலந்தாய்
உன் நாமம்- உயிர்
மூச்செலாம் நிறைத்தாய்
உன் நினைவை –எத்தனை
நான் எதிர்த்த போதும்
என்னுள் நட்புடன் நீ !
என்ன மாயம் செய்தாய்


ஒரு கோடி வருடங்கள்
உருண்டோடி சென்றாலும்
உன் அன்பு தனை நினைத்து
நினைவிலே நிறைந்திருப்பேன்!
நீங்காத நினைவிற்காய்
நீண்ட தவம் நான் செய்ய
என்ன மாயம் செய்தாய் நீ !

பித்தாகி போனதற்கு
பூர்வ ஜன்மம் காரணமோ
தொடர்ந்து வரும் நாட்களிலும்
தொடர் கதையாய் இருந்திடுமோ
இத்தனை நான் நினைக்க
என்ன மாயம் செய்தாய் நீ!

தென்றலினும் மென்மையாம்
புயலினும் வன்மையாம்
நம் நட்பெனும் மூச்சு
நெடுநாள் வாழ
ஒரு மாயம் செய் போதும் !!!

எழுதியவர் : thilakavathy (26-Sep-13, 7:36 pm)
பார்வை : 69

மேலே